Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கை காலம் தாழ்த்தாது வரும் மார்ச் மாதம் வெளியிடப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இலங்கையின் புதிய அரசாங்கம் உள்ளூர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ள போதிலும், சர்வதேச நாடுகளின் கண்காணிப்பின்றிய விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை மீதான விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் வெளியிட்டதன் பின்னர் இடம்பெறும் தொடர் நடவடிக்கையே மிக முக்கியமானதாகும். அந்தத் தொடர் நடவடிக்கையை மனித உரிமைகள் ஆணையகம் இறுக்கமாக மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச விசாரணை குறித்த அறிக்கை வெளிவர வேண்டும். இந்த அறிக்கைதான் உண்மையைக் கண்டறிவதற்கான அத்திபாரமாக இருக்கும்.

உண்மையைக் கண்டறியாமல் அல்லது உண்மையைக் கண்டறிந்து அதை மூடிமறைத்து நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. தற்போது உள்ளூர் விசாரணையை நடத்துவதற்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெற இருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.

உள்ளூர் விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் மேற்பார்வையின் கீழ் உள்ளக விசாரணை இடம்பெறுவதற்கு உத்தரவாதம் கொடுத்தால், அதை நாம் வரவேற்போம். ஆனால், அறிக்கையை வரவிடாமல் தடுத்து, உள்நாட்டு விசாரணையை முன்னெடுப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஐக்கிய நாடுகளின் விசாரணையின் போது விசாரணையாளர்கள் நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படவில்லை. அவர்களுடைய காலத்தை நீடித்து நாட்டுக்குள் வந்து விசாரணையை நடத்த இலங்கை அரசாங்கம் இடமளித்தால், காலத்தை நீடிக்க நாம் இணக்கம் தெரிவிக்கலாம். எனவே, விசாரணை தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு இலங்கை அரசாங்கம் எந்தவிதமான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கின்றது என்று எமக்குத் தெரியவேண்டும். அது தெரிந்தால்தான் அதை ஆதரிக்கலாமா? இல்லையா என்று முடிவு செய்யலாம்.” என்றுள்ளார்.

0 Responses to உள்ளூர் விசாரணைகளில் நம்பிக்கையில்லை; ஐ.நா. விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com