Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

‘சண்டே லீடர்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, இலங்கை ரக்பி அணி வீரர் வசீம் தாஜூதின் படுகொலை மற்றும் ‘லங்கா ஈ நியூஸ்’ செய்தி தளத்தின் ஆசிரியர் பிரதீப் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பான விசாரணைகளை இரகசிய பொலிஸாரிடம் (சி.ஐ.டி) ஒப்படைக்க பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், கம்பஹா வெலிவேரிய ரத்துபஸ்வல மூவர் படுகொலை தொடர்பான விசாரணைகளையும் புதிதாக ஆரம்பிக்குமாறு இரகசியப் பொலிஸாருக்கு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “2012 ஆம் ஆண்டு மே மாதம் வசீம் தாஜுதீன் மர்மமான முறையில் மரணமாகியிருந்தார். நாரஹேன்பிட்டியில் இந்த சம்பவம் நடைபெற்றிருந்தது. இரண்டு சாட்சியங்கள் பதிவாகியிருந்தன. அந்த இடத்தில் மரண விசாரணைகள் நடத்தப்பட்டதுடன் இரசாயன பகுப்பாய்வாளரும் பார்வையிட்டிருந்தார். ஆனால் அன்று முதல் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டது. எனினும், இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைத்திருக்கவில்லை.

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவத்தின் பின்னர் 2015.02.12 ஆம் திகதியே இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைத்துள்ளது. எனினும் அந்த அறிக்கையிலும் மரணத்துக்கான காரணத்தை கண்டறியக்கூடிய எந்த சாதகமான விடயங்களும் இல்லை.

ஆயினும், மரண விசாரணை அறிக்கையின்படி இவரது உடலில் காபன் மொனோக்சைட் கலந்திருப்பதாக அறியக் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் இரகசியப் பொலிஸாரினால் விசாரணைகள் புதிதாக ஆரம்பிக்கப்படும். இவரது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் எதுவும் இருக்கவில்லை என்றே பதிவாகியுள்ளது.

இதேபோன்று பிரதீப் எக்னெலிகொட தொடர்பான விசாரணைகளும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. குறிப்பாக 2010.01.24 ஆம் திகதி மாலை இவர் காணமற்போயுள்ளதாக ஹோமாகம பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். 48 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

இரண்டு சிம்கார்ட்டுகள் தொடர்பான விசாரணைகளும் நடத்தப்பட்டன. போலியான பெயர் வழங்கப்பட்டே சிம்கார்ட் பெறப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இந்த விசாரணையையும் புதிதாக ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

அத்தோடு, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை விசாரணைகளும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்படுகிறது. 2009.01.08 ஆம் திகதி அத்திடிய பகுதியில் வைத்து லசந்த படுகொலை செய்யப்பட்டார். கல்கிஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது.

பொலிஸார் விஞ்ஞான ஆய்வு ரீதியான விசாரணைகளை மேற்கொண்டனர். இதனடிப்படையில் இரண்டு பேர் கைதானதுடன் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் காலத்தினுள் மரணமானார். அடுத்த நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், கல்கிஸ்ஸ நீதிமன்றம் லசந்த விக்கிரமதுங்கவின் விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறும் உத்தரவிட்டிருந்தமைக்கு அமைய நேற்று முன்தினம் இந்த விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் ரத்துபஸ்வல மூவர் படுகொலை தொடர்பான விசாரணைகளும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. 2013.01.01 ஆம் திகதி நடைபெற்ற இச்சம்பவத்தில் மூவர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த விசாரணைகள் அனைத்தும் மிக குறுகிய காலத்துள் முடிக்கப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to லசந்த விக்ரமதுங்க, வசீம் தாஜூதின் படுகொலை விசாரணைகள் சி.ஐ.டி வசம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com