Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் மீள்குடியேற்றம், காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்களில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சூழலிலேயே தமிழ்க் கூட்டமைப்பு இந்தக் கருத்தினை முன்வைத்துள்ளது.

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் வேளையில், திரும்புவர்கள் மீள்குடியேறுவதற்கான காணிகள் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் மக்களின் பெருமளவான காணிகள் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, இந்தியாவிலிருந்து வருபவர்களின் மீள்குடியேற்றம் எந்த அளவுக்கு சாத்தியமாகும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இராணுவத்தின் பிடியில் இருக்கும் நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்பட்டு அங்கு மக்கள் தமது சொந்த இடத்தில் மீளக்குடியேறுவதற்கு இந்தியா அழுத்தம் கொடுத்தால் அது மிகவும் வரவேற்கத்தக்கதாக அமையும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியுடன் தாங்கள் பல முறை பேசியுள்ளதாகவும், அவர் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து முழுமையாக அறிந்துள்ளார் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

அவ்வாறே, இந்தியாவுக்கும் மக்களின் மீள்குடியேற்றம், காணாமற்போனவர்கள் குறித்த விபரங்கள் இல்லாமை, விசாரணைகள் ஏதுமின்றி ஆண்டுகள் கணக்கில் சிறையிலுள்ள தமிழர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் போன்றவை முழுமையாகத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தின்போது உறுதியான தீர்வுகள் எட்டப்படும் வகையில் இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to தமிழ் மக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்: கூட்டமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com