Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மோடி அரசுக்கு மரண அடி: வைகோ

பதிந்தவர்: தம்பியன் 10 February 2015

நரேந்திர மோடி அரசுக்கு டெல்லி வாக்காளர்கள் கொடுத்த மரண அடியானது, ஜனநாயகம் காத்த மக்களின் மௌனப் புரட்சி என மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது அறிக்கையில்,

உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடு இந்தியா என்பது 1977 க்குப் பின்னர் மீண்டும் இப்போது டெல்லி மாநில வாக்காளர்களால் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இமாலய வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மாநில வாக்காளர்கள் பாசிச இந்துத்துவ வெறிபிடித்த நரேந்திர மோடி அரசுக்குப் பாடம் புகட்டுகின்ற வகையில், பாரதிய ஜனதா கட்சியை விளக்குமாற்றால் விரட்டி, படுதோல்வி எனும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்கள்.

உலக உத்தமர் காந்தியாரை பிரார்த்தனைக் கூட்டத்தில் சுட்டுக் கொன்ற கொலைகாரப் பாவி நாதுராம் விநாயக் கோட்சே எனும் நச்சுப்பாம்பைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி, சிலையும் எழுப்ப முற்பட்ட இந்துத்துவ சக்திகளுக்கும், அதற்கு வெண்சாமரம் வீசிய நரேந்திர மோடி அரசுக்கும் வாக்காளர்கள் மிகச்சரியான பாடம் கற்பித்துள்ளார்கள்.

சாமானியனுக்கும், சாதாரண மனிதனுக்கும் ஜனநாயகம் ஆட்சி மகுடத்தைச் சூட்டும் என்பதுதான் ஆம் ஆத்மி கட்சியின் விண்முட்டப் புகழ் படைக்கும் வெற்றியாகும்.

பன்னாட்டுப் பகாசூரக் கம்பெனிகளுக்கும், உள்நாட்டுக் கொள்ளைக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஏஜெண்ட் வேலை பார்த்த நரேந்திர மோடி அரசை, எண்ணி எட்டே மாதங்களில் மக்கள் முற்றாக நிராகரித்து விட்டார்கள்.

நடந்து இருப்பது ஜனநாயகப் புரட்சி. மக்களின் மௌனப்புரட்சி. டெல்லி மாநிலத்தில் மட்டும் அல்ல, காஷ்மீரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை மதச்சார்பற்ற தன்மைக்கு உலைவைக்க முற்பட்டுவிட்ட நரேந்திர மோடி அரசுக்கு எதிரான மவுனப்புரட்சி அலை மக்கள் மனங்களில் எழுந்து விட்டது.

இந்தியாவிலேயே பல ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி மிகுந்த பலம் பெற்று இருந்த டெல்லி மாநிலத்திலேயே அந்தக் கட்சியின் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டது; நாடெங்கும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக மக்கள் மனதிலே எழுந்துள்ள கொந்தளிப்பை டெல்லித் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டி இருக்கின்றன.

மக்கள் ஆதரவை இழந்துவிட்ட நரேந்திர மோடியின் மத்திய அரசு பதவி விலக வேண்டும். இந்திய ஜனநாயகத்தின் பெருமையை மேலும் உயர்த்த, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்த வேண்டும்.

5 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்த ஜனநாயகம் அனுமதிக்கிறதே என சிலர் கேட்கலாம். ஆனால் சுதந்திர இந்திய வரலாற்றில் நெருக்கடி நிலை காலத்திற்கு பிறகு ஒரு அசாதாரணமான நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையைத் தகர்த்து, ஆணிவேரை அறுக்கும் வேலையில் மோடி அரசின் முழு ஆதரவுடன் இந்துத்துவ சக்திகள் பாசிசத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.

இந்தியாவின் ஜனநாயகத்தையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து வரும் அனைத்து அரண்களையும், குறிப்பாக மதச்சார்பற்ற தன்மையையும் நிர்மூலமாக்க பாரதிய ஜனதா கட்சியின் சங் பரிவாரங்கள் மூர்க்கத்தனமாகக் கொக்கரிக்கின்றன.

இதற்கு மேல் மத்திய அரசாக நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா அரசு நீடிப்பது ஜனநாயகத்தை நசுக்கும் பாசிச அடக்குமுறை நாட்களாகவே ஒவ்வொரு நாளும் கடக்கும்.

எனவே நரேந்திர மோடி அரசு தானாக விலகாவிட்டால் அந்த அரசுக்கு எதிராக மக்களின் மௌனப்புரட்சியை முன்னெடுக்க ஜனநாயக முற்போக்கு சக்திகள் அறவழியில் போராட்டங்களை விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், வணிகர்கள் என அனைத்துக் களங்களிலும் தொடர வேண்டும்.

என குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to மோடி அரசுக்கு மரண அடி: வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com