Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிகூடிய அதிகாரப் பகிர்வின் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியும். அதனையே, நாம் தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை இரு வருடங்களில் காண முடியுமென தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், இந்த விடயத்தில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதால் நிச்சயமாக இது சாத்தியப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படு இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே எம்.ஏ.சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே சர்வதேச விசாரணையும், உள்நாட்டு விசாரணையும் நடத்தப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் சர்வதேச அறிக்கையையே எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிடுவதாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்பட்ட சர்வதேச விசாரணை அறிக்கையை செப்டம்பர் மாதத்தில் வெளியிடுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறே உள்நாட்டிலும் விசாரணை நடத்தப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. உள்நாட்டு விசாரணையா, சர்வதேச விசாரணையா என்ற குழப்பம் காணப்படுகிறது.

சென்ற வருடம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் 10வது பந்தியில் உள்நாட்டு விசாரணை நடக்க வேண்டுமென்றும் அந்த விசாரணை ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் மூலம் நடத்தப்பட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே பந்தியில் அதனை மேற்பார்வை செய்யவும் அதற்கு சமாந்தரமாக சர்வதேச விசாரணையொன்றை நடத்த வேண்டுமென்று தெரிவிக்கப் பட்டிருந்தது. இது ஐக்கிய நாடுகள் பொறிமுறையின் முக்கியமான விடயமாகும். சர்வதேச விசாரணை இல்லாவிட்டால் அது பக்கச்சார்பான விசாரணையாக இருக்க முடியாது.

அதனால் சுதந்திரமான சர்வதேச விசாரணை அவசியம். அதனுடைய அறிக்கைதான் வெளிவர தாமதமாகியிருக் கிறது. ஆனால், சர்வதேச விசாரணை வெளிவருவதில் பயன் எதுவும் இல்லை. அது அறிக்கை மாத்திரமே. உள்நாட்டிலே முன்வைக்கப்படும் சிபாரிசுகள் விசாரணை செய்யப்பட வேண்டும். கடந்த அரசாங்கத்தி னால் அது செய்யப்படவில்லை.

தற்போதைய அரசாங்கம் சர்வதேச விசாரணையை ஏற்றுக் கொண்டுள்ளது. அரசாங்கமே அறிக்கைகளை செப்டம்பர் மாதத்தில் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டது. சர்வதேச விசாரணையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அரசு சொல்லவில்லை. சர்வதேச விசாரணையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது.

உள்நாட்டு விசாரணையை சர்வதேச மேற்பார்வையுடன் நடத்துவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச விசாரணையில் தெரிவிக்கப்பட்ட வியடங்கள் உள்நாட்டு விசாரணையிலும் இருக்கிறதா இல்லையா என்பது இதன் மூலம் தெரியவரும். ஆகவேதான் சர்வதேச விசாரணை அவசியம்.

கடந்த வருடம் ஐநாவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இரண்டும் நடைபெற வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையில் சர்வதேச விசாரணையும், உள்நாட்டு விசாரணையும் நடத்தப்பட வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. இரண்டும் நடைபெறும் போதுதான் நீதியை வழங்கும் முறை உள்நாட்டில் செயற்படுத்தப்படும். சர்வதேச மேற்பார்வையோடு உள்நாட்டு விசாரணை மேற்கொள்ளப்படுவது அவசியமாகும். ஆகவே, இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடு இனப்பிரச்சினை விடயத்தில் முழுமையான தீர்வை முன்வைக்கும்.” என்றுள்ளார்.

0 Responses to அதிகூடிய அதிகாரப் பகிர்வின் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படலாம்: எம்.ஏ.சுமந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com