Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடத்தும் உள்ளக விசாரணைகள் நம்பகமானதும், பொறுப்புக் கூறக் கூடியதும், சர்வதேச தரத்திலானதுமான பொறிமுறைகளைக் கொண்டதாக அமைய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

இதனை, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பேச்சாளரான எரி கான்கோ தெரிவித்துள்ளார்.

எரி கான்கோ மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையில் போருக்குப் பின்னர் சமாதானம் மற்றும் நல்லிணக்க விடயங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதேபோன்று நாட்டின் ஜனநாயகம், அபிவிருத்தியிலும் கணிசமான மாற்றங்களைக் காணமுடிகின்றது. இந்த மாற்றங்களுக்கு ஐக்கிய நாடுகள் ஆதரவுகளை வழங்கியிருந்தது. இந்த ஆதரவைத் தொடரவே ஐக்கிய நாடுகள் விரும்புகின்றது.

இலங்கை அரசாங்கம் வகுத்துள்ள புதிய, பொறுப்புக் கூறக்கூடியதான உள்நாட்டுப் பொறிமுறை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் கவனம் செலுத்தி வருகின்றார். இதேபோன்று இலங்கையின் மனித உரிமைகள் விவகார முன்னேற்றங்களுக்கு மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரும் ஆதரவுகளை வழங்குகிறார்.

எனினும், மனித உரிமைகள் விடயத்தில் இலங்கைக்கு சில சிக்கல்கள் உள்ளன. இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் தனது விடயங்கள் தொடர்பில் இலங்கை கருத்துத் தெரிவிக்க வேண்டியிருக்கும். ஐக்கிய நாடுகள் சபை, யுத்தத்திற்கு பிந்திய நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு இலங்கைக்கு தொடர்ந்தும் உதவி வழங்கும்.

இலங்கை அரசாங்கம் புதிய உள்நாட்டு பொறிமுறையை முன்னெடுப்பது குறித்து ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அறிந்துள்ளார். அவர் இதனை அவதானமாக ஆராய்வார். இலங்கை, நம்பகத்தன்மை மிக்க பொறிமுறைகளை ஏற்படுத்துவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்” என்றுள்ளார்.

0 Responses to போர்க்குற்றங்கள் தொடர்பிலான இலங்கையின் உள்ளக விசாரணைகள் சர்வதேச தரத்தில் நடத்தப்பட வேண்டும்: பான் கீ மூன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com