Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

என்ன ஆகும் ஈழப்பிரச்னை?

பதிந்தவர்: தம்பியன் 14 February 2015

ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இந்தியா வருகிறார். கடந்த காலங்களில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் போராட்டங்கள் நடப்பது வழக்கமாக இருந்தது.

இப்போது மைத்திரி பாலவின் வருகையை தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் பிரதிநிதியாகக் கருதி எதிர்ப்பதா, அல்லது ராஜபக்சேதான் இனப்படுகொலைக்குக் காரணம் என்பதால் அவர் வருகையை மட்டுமே எதிர்க்கவேண்டும் என்று பொருள் கொள்ளலாமா என்று கேட்டால் தெளிவான பதில்களை நாம் கண்டடைய முடியாது.

எப்படியிருந்தபோதிலும் ராஜபக்சேவின் தோல்விக்குப் பிறகு ஈழ ஆதரவுப் போராட்டத்தின் வீரியம் சற்று குறைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இறுதிப்போரில் இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை தேவை, தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், இலங்கை ராணுவம் தமிழர் பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை தமிழர்களே தீர்மானிக்க வேண்டும். இவை ஈழ ஆதரவாளர்களின் கோரிக்கைகள். ஆனால் இவற்றை வலியுறுத்திய போராட்டங்கள் இப்போது சற்று மங்கிப்போயிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். ராஜபக்சேவின் தோல்வியோடு எல்லாம் முடிந்துவிட்டதா?

‘இல்லை’ என்கிறது வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட ‘இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை தேவை’ என்ற தீர்மானம். இந்தத் தீர்மானம் குறித்தும் தொடர்ச்சியாக ஈழத்தமிழர் பிரச்சனைகளின் தீர்வு நோக்கியும் தமிழகச் சூழலிலும் இந்தியச்சூழலிலும் என்ன மாதிரியான அணுகுமுறைகள் இருக்கின்றன என்று பார்ப்போம்.

வழக்கம் போல வடக்கு மாகாண சபையில் முதல்வர் விக்னேஷ்வரன் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை ஆதரித்துள்ள வைகோ ‘தமிழகச் சட்டசபையிலும் இதை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்று தெரிவித்திருக்கிறார். திருமாவளவனும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்து அறிக்கைவிட்டிருக்கிறார். சீமான், நெடுமாறன் போன்றவர்களும் இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இது சர்வதேச அளவிலோ இந்திய அளவிலோ கவனம் பெறுவதற்கு இவர்களின் ஆதரவு மட்டும் போதாது. தமிழக அரசு மற்றும் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று தெரியவேண்டும்.

வைகோவும், திருமாவளவனும் வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தை ஆதரிப்பதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் யாரும் எதிர்பாராதவாறு எதிர்முகாமில் இருந்து ஓர் ஆதரவுக்குரல் எழுந்திருக்கிறது. அது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் குரல். அவரும் ‘இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும்’ என்று அறிக்கை விட்டிருக்கிறார்.

கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களாலும், ஈழ ஆதரவாளர்களாலும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது காங்கிரசும் தி.மு.க.வும்தான். இனப்படுகொலை நடந்தபோது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது இவர்கள்தான். மன்மோகன் அரசு இருந்தபோது, ராஜபக்சேவும் இலங்கை அதிபராக இருந்தபோது இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணையை வலியுறுத்தாமல் இப்போது ஈ.வி.கே.எஸ் வலியுறுத்துவதை அரசியல் சந்தர்ப்பவாதம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது? கிட்டத்தட்ட தி.மு.க.வின் நிலையும் இதுதான்.

கடந்த காலங்களில் இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க. காட்டிய ஆர்வமும் செயல்பாடுகளும் இறுதிப்போரில் அது நடந்து கொண்ட முறையில் அடிபட்டுப் போயின. ஆட்சி போனபிறகு கருணாநிதி மீண்டும் கொண்டுவந்த டெசோ அமைப்பும் ஏளனமாகத்தான் பார்க்கப்படுகிறது. இப்போது ‘இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை தேவை’ என்ற தீர்மானத்தின் மீது அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. நிலைப்பாடு என்ன என்று தெரிய வேண்டும்.

கடந்த காலங்களில் பா.ஜ.க. புலியெதிர்ப்பு அரசியலையே முன்வைத்திருக்கிறது. இந்து முன்னணி ராமகோபாலன் தொடங்கி தமிழக பா.ஜ.க. வரை இந்துத்துவவாதிகளின் குரல் விடுதலைப்புலிகளை எதிர்க்கும் ஒற்றைக்குரல்தான். அடிப்படையிலேயே அவர்களின் இந்துத்துவக் கருத்தியல் தமிழ்த்தேசியம், தனி ஈழக்கோரிக்கை ஆகியவற்றுக்கு எதிரானது.

இந்துத்துவவாதிகள் முன்வைக்கும் கலாசாரத் தேசியம், தேசிய இனப்பிரச்னைகள், மொழிவாரித் தேசியம் ஆகியவற்றை ஏற்காது. அந்த அடிப்படையில் தொடர்ச்சியாக ஈழ எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டைத்தான் பா.ஜ.க. கொண்டிருந்தது.

ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸை வீழ்த்துவதற்கான ஆயுதமாக ஈழப்பிரச்னையை பா.ஜ.க. கையில் எடுத்துக்கொண்டது ஒரு சந்தர்ப்பவாத நிலைப்பாடுதான் என்பதை மோடி ஆட்சிக்கு வந்த எட்டு மாதங்கள் நிரூபித்திருக்கின்றன.

தொடர்ச்சியாக இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் ஈழத்தமிழர்கள், புலிகளுக்கு எதிராகவும் சுப்பிரமணியன்சாமி பேசிவருகிறார். இதை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தமிழக பா.ஜ.க. ‘இது கட்சியின் நிலைப்பாடு இல்லை‘ என்று சொல்லிவந்தாலும் தேசியத்தலைமை சு.சாமியின் கருத்துகளை மௌனமாக ஆதரித்துத்தான் வந்திருக்கிறது.

இதுமாதிரியான நிலைப்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்து வைகோ கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். கூட்டணியில் இருந்தாலும் பா.ம.க. தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைக்கிறது. கடந்த காலங்களில் ராஜபக்சேவை நியாயப்படுத்தி காங்கிரஸ்காரர்கள் பேசிய அதே பேச்சுகளை இப்போது பா.ஜ.க.வினர் பேசிவந்தனர்.

இன்னும் ஒருபடி மேலே போய் ‘இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே அல்ல‘ என்று தொலைக்காட்சி விவாதங்களில் தமிழக பா.ஜ.க.வினர் பேசத் தொடங்கியிருக்கின்றனர். எனவே இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணை என்ற விஷயத்தை இனி பா.ஜ.க. பேசாது என்றே தெரிகிறது.

கடந்த காலங்களில் பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவவாதிகள் இலங்கைப் பிரச்சினையில் கொண்டிருந்த கடுமையான புலி எதிர்ப்பு நிலைப்பாட்டையே ஜெயலலிதாவும் கொண்டிருந்தார். ஆனால் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸையும், தி.மு.க.வையும் வீழ்த்த, பா.ஜ.க.வைப் போலவே ஈழப்பிரச்னை என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்தார் ஜெயலலிதா. ஆனால் அது தேர்தலோடு நின்றுபோகாமல் தொடர்ச்சியாக ஈழப்பிரச்னை குறித்த தீர்மானங்களைச் சட்டசபையில் நிறைவேற்றினார்.

எனவே வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தை ஆதரித்து விரைவில் கூடவிருக்கும் சட்டமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் அரசு தீர்மானம் போடுமா? என்பதை உறுதியாகச் சொல்லமுடியவில்லை. ஏனெனில் இப்போது அ.தி.மு.க.வின் தலையாயச் சிக்கலே ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலையாவதுதான். எனவே ஈழப்பிரச்னை, இனப்படுகொலை பற்றியெல்லாம் கவலைப்படுவதற்கோ கவனம் செலுத்துவதற்கோ அ.தி.மு.க.விற்கு நேரமிருக்குமா என்று தெரியவில்லை. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களால் பெரியளவு தீர்வு எதுவும் ஏற்படாது என்றாலும், அதற்கான முக்கியத்துவம் என்பது இருக்கத்தான் செய்கிறது.

மத்திய அரசைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. மன்மோகன் அரசின் நிலைப்பாடுதான் இன்றுவரை மோடி அரசின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. இந்தியா வரும் மைத்திரிபால சிறிசேனவிடம் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்தோ இனப்படுகொலை குறித்தோ மோடி வலியுறுத்துவார் என்று நம்புவதற்கான முகாந்திரங்கள் இல்லை.

அதேநேரத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால அரசிடம் சில நல்ல அறிகுறிகள் தெரிகின்றன. தமிழக மீனவர்களின் படகுகளை விடுவித்திருப்பது ஒரு நல்ல தொடக்கம். (நல்லவேளை மைத்திரிபால சிறிசேன சுப்பிரமணியசாமியிடம் ஆலோசனை கேட்கவில்லை) அதேபோல் யாழ்ப்பாணத்தில் விமானப்படைக்குச் சொந்தமான நிலத்தைத் தமிழர்களுக்கு வழங்குவதாகவும் இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.

13வது சட்டத்திருத்தம் என்பதை ஈழ ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் ஏற்காவிட்டாலும், 13வது சட்டத்திருத்தத்தைக் கொண்டு வருவதாக மைத்திரிபால அரசு அறிவித்திருக்கிறது. தமிழர்களுக்கு எந்த உரிமையையும் தரத் தயாராக இல்லாத ராஜபக்சே அரசோடு ஒப்பிடும்போது இது கொஞ்சம் சிறிய முன்னேற்றம்தான். ஆனாலும் இவற்றையெல்லாம் தமிழர்கள் நம்பமுடியுமா என்ற சந்தேகமும் எழுகிறது. ஏனெனில் இலங்கை அரசின் தந்திரங்களும் தமிழர்களின் ஏமாற்றங்களும் நிறைந்த கடந்த கால வரலாற்று அனுபவங்கள் அப்படி!

ராஜபக்சேவைப் பழிவாங்குவதற்காவது அவரின் அத்துமீறல்களை மைத்திரிபால அரசு விசாரிக்கிறது. அந்தப் பட்டியலில் ராஜபக்சே அரசின் போர்க்குற்றங்களில் சிலவற்றையாவது மைத்திரிபால அரசு விசாரிக்கும் என்று நம்பலாம். அதேநேரத்தில் இதைக் கண்டிப்பாக ‘இனப்படுகொலை‘ என்று அறிவிப்பதற்கு இலங்கை அரசு ஒப்புக்கொள்ளாது. அப்படி ஒப்புக்கொண்டால் சிங்கள இனவாத அமைப்புகளைச் சமாளிக்க முடியாது, பெரும்பான்மை சிங்கள மக்களிடம் ஆதரவை இழந்துவிடுவோம் என்ற அச்சம் அதிபருக்கு இருக்கும். இப்போதே ‘போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையை நாங்களே செய்து கொள்கிறோம். சர்வதேச விசாரணை தேவையில்லை‘ என்று இலங்கை அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நாவிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். ஐ.நா.வின் விசாரணை அறிக்கையையே தாமதமாக சமர்ப்பிக்கும்படி அமெரிக்காவிடம் கோரிக்கையும் வைத்திருக்கிறார்.

உண்மையிலேயே என்றாவது ஒருநாள் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடப்பதற்கான சாத்தியங்களோ அறிகுறிகளோ உண்டா? அப்படியே நடந்தாலும் ராஜபக்சே உள்ளிட்ட இனப்படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? இப்போதுவரை விடை தெரியாத கேள்விகள்தான் இவை.

0 Responses to என்ன ஆகும் ஈழப்பிரச்னை?

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com