Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் இருந்து வெளியாகும் 'தமிழக அரசியல்' வார இதழில் (14-02-2015) இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் எழுதி வெளிவந்த கட்டுரை....

சென்ற வார கேள்வியை, வேறு மாதிரியாகப் புரிந்துகொண்டு என்னிடம் சந்தேகம் கேட்ட நண்பர்களுக்கு முதலில் பதில் சொல்லிவிடுகிறேன்.

மார்ச் வரை மைத்திரிபாலா சிறிசேனா தாக்குப் பிடிப்பாரா - என்கிற கேள்வி - 'மார்ச் வரை ஜனாதிபதி பதவியில் மைத்திரி தாக்குப் பிடிப்பாரா' என்கிற அர்த்தத்தில் மட்டுமே எழுப்பப்பட்டது. தமிழர்களுடனா ஒப்பந்தம் செய்து கொள்கிறாய் - என்கிற ஆத்திரத்துடன் பண்டாவைச் சுட்டுக்கொன்ற புத்த பிக்குவை மனதில் வைத்துக்கொண்டு எழுதப்பட்டதல்ல!

சந்திரிகா குமாரதுங்காவின் தந்தையான சாலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்காஇ இலங்கையின் 4வது பிரதமர். அங்கிலிக்கன் கிறிஸ்தவரான அவர் பௌத்த வெறி பிடித்த சிங்கள இனத்திற்கிடையே தன்னை ஒரு பௌத்தராகவே அடையாளம் காட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. (கொல்லப்பட்ட பிறகு அவரது இறுதிச் சடங்குகள் கிறிஸ்தவ முறைப்படியே நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.)

தமிழர்களின் தாயகத்தில் குடியேறியவர்கள் தான் சிங்களவர்கள் - என்கிற வரலாறு தெரியாதவரல்ல பண்டாரநாயக்கா. அதெல்லாம் தெரிந்தும் 'சிங்கள மொழிக்கே முதலிடம்' என்று அறிவித்து தமிழ்ச் சமூகத்தைக் கொதித்தெழச் செய்த மகானுபாவர் அவர். இது நடந்தது 1956ல்!

பண்டாவின் 'சிங்களம் மட்டும்' சட்டத்துக்கு எதிராக திருகோணமலையில் கூடிய சமஷ்டிக் கட்சி மாநாடு, கூட்டாட்சி முறையை வலியுறுத்தியது. சிங்களத்துக்கு இணையான அந்தஸ்து தமிழுக்கு தரப்பட வேண்டும் என்று கோரியது. அந்த மாநாட்டின் இன்னொரு முக்கியக் கோரிக்கை - 'தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தை நிறுத்து' என்பது. (அப்போதே தொடங்கிவிட்டது தமிழர் பூமியை அபகரிக்கும் கொடுமை!)

ஓராண்டுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அகிம்சை முறையில் கடுமையாகப் போராடப் போவதாக சமஷ்டிக் கட்சி எச்சரித்தது. ஆனால் அந்த எச்சரிக்கை வெளியாகும்முன்பே மக்கள் போராட்டங்களால் தமிழர் பகுதிகளில் அமைதி சீர்குலையத் தொடங்கிவிட்டது. வேறு வழியில்லாமல் 1957 ஜூலையில் தந்தை செல்வாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார் பண்டா. பண்டா - செல்வா ஒப்பந்தம் என்றே அழைக்கப்படுகிறது அது. (ஜூலை என்றாலே இலங்கைக்குப் போதாத காலம் போல! 1957 ஜூலையில் பண்டா - செல்வா ஒப்பந்தம்... 1987 ஜூலையில் ராஜீவ் - ஜெயவர்தன ஒப்பந்தம்!)

தனிச் சிங்களச் சட்டத்தைத் தமிழர்கள் கடுமையாக எதிர்த்தார்கள் என்றால் பண்டா - செல்வா ஒப்பந்தத்தை பௌத்த சிங்களவர்கள் மிக மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது மாதிரி ஆகிவிட்டது பண்டாவின் நிலைமை.

அவரது வீட்டை முற்றுகையிட்ட பௌத்த பிக்குகள் ஒப்பந்தத்தைக் கிழித்தெறியச் சொன்னார்கள். மறுபேச்சே பேசவில்லை பண்டா. பிக்குகளுக்குப் பயந்து செல்வாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அவர்கள் கண்ணெதிரிலேயே கிழித்தெறிந்தார்.

மகாவம்ச ரவுடிகள் அத்துடன் நின்றுவிடவில்லை. 1959 செப்டம்பர் 25ம் தேதி சோமராம என்கிற பௌத்தபிக்கு பண்டாவை அவரது வீட்டுக்குள்ளேயே பாயின்ட் பிளாங்க் ரேஞ்சில் துப்பாக்கியால் சுட்டான். (கடைந்தெடுத்த கோழைகளின் பெயர் 'கோட்சே' என்று மட்டும்தான் இருக்கவேண்டுமா என்ன?) உயிருக்குப் போராடிய அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றனர். சிகிச்சை பலனளிக்காமல் மறுநாள் உயிரிழந்தார் பண்டா.

(இந்த வரலாற்றை இங்கே குறிப்பிடக் காரணமாக இருந்த நண்பர்களுக்கு நன்றி!)

வரலாறு தெரியாதவரைப் போல் பண்டா நடித்தது மாதிரி பண்டாவை அறியாதவர் போல் மைத்திரி நடிக்க முடியாது. தமிழர்களுக்காக ஒரு துரும்பைத் தூக்கிவைத்தாலும் பௌத்த சிங்களப் பேரினப் பூதம் தன்னை ஸ்வாஹா செய்துவிடும் என்பது மைத்திரிக்குத் தெரியும். அந்தப் பூதத்தைத் தூண்டிவிட தங்காலையில் தங்கியிருக்கிற அரக்கன் என்னென்ன செய்வான் என்பதும் தெரியும்.

தங்காலை மகிந்த ராஜபக்சேவின் சொந்த ஊரல்ல! என்றாலும் அங்குதான் தங்கியிருக்கிறான் அந்த இனவெறி அரக்கன். கடலோரத்தில் தங்கி தனது உஷ்ணத்தைத் தணித்துக் கொள்கிறானோ என்னவோ! பிப்ரவரி 8ம் தேதி அவன் ஆட்சியை இழந்த 30வது நாள் என்பதால்இ தங்காலையை முற்றுகையிட்டார்கள் அவனது ஆதரவாளர்கள். அவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறங்களைச் சேர்ந்த அப்பாவிச் சிங்களவர்கள். 'தோத்துட்டியே மகிந்த' என்று கண்ணீர் வடித்திருக்கிறார்கள் அவர்கள்.

கண்ணீரோடு தன்னைச் சூழ்பவர்களை இனவெறியில் முக்கியெடுத்து அனுப்புகிறான் மகிந்தன். 'ஏன் அழுகிறீர்கள்.... நீங்களா என்னைத் தோற்கடித்தீர்கள்' என்று அவர்களிடம் கேட்கிறான். 'இல்லை இல்லை' என்று குரல் எழுப்புகிறது இன வெறிபிடித்த அந்தக் கூட்டம். "நான் உங்களால் தோற்கவில்லை. தமிழர்கள் என்னைத் தோற்கடித்தனர் முஸ்லிம்கள் என்னைத் தோற்கடித்தனர்" என்று மகிந்தன் பேசப்பேச ஆத்திரத்தில் குமுறுகிறது அந்தக் கும்பல்.

மகிந்தன் சொல்வது நூறு சதவிகித உண்மை. சிங்களப் பகுதிகளில் சிங்கள மக்களின் வாக்குகள் மகிந்தனுக்கு எதிராகப் போய்விடவில்லை. மைத்திரியும் அவனும் ஆளுக்குப் பாதி என்று பிரித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழர் பகுதிகளில் மைத்திரிக்கு விழுந்த வாக்குகள்தான் அவரை ஜனாதிபதி நாற்காலியில் அமர்த்தியிருக்கிறது.

இதைத்தான் சிங்கள மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சிங்கள மக்களின் ஜனாதிபதி யார் - என்பதைத் தமிழர்கள் தீர்மானித்திருப்பது பௌத்த சிங்கள அடிப்படைவாதத்தின் அஸ்திவாரத்தைக் கொதிநிலையிலேயே வைத்திருக்கிறது. வெடிப்பதற்குமுன் உள்ளுக்குள்ளேயே சூடாகிக் கொண்டிருக்கிற எரிமலை மாதிரிக் கிடக்கிறது சிங்கள இனம்.

இலங்கையின் பிரச்சினை அரசியல்வாதிகள் அல்ல! மத - இன வெறியிலிருந்து விடுபடாத மக்களின் மனநிலைதான் தலையாய பிரச்சினை. தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரமெல்லாம் இருக்கக் கூடாது என்பது அரசியல்வாதிகள் எடுத்த முடிவு அல்ல...... அது சிங்கள மக்களின் விருப்பம். காணி - காவல்துறை அதிகாரங்கள் இல்லாத டம்மி பொம்மைகளாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் இருப்பது இந்த சிங்கள விருப்பத்தின் வெளிப்பாடுதான்.

சிங்கள மக்களின் இனவெறி இத்துடன் நின்றுவிடவில்லை. தமிழர்களின் மாகாண சபைகள் டம்மி பொம்மையாக இருந்தால் மட்டும் போதாது தமிழர்கள் சிங்கள இனத்தின் அடிமைகளாகவும் இருந்தாகவேண்டும் - என்று வலியுறுத்துகிறது பௌத்த சிங்கள இனவெறி. அதன் வெளிப்பாடுதான் வட கிழக்கின் மூலை முடுக்கெல்லாம் குவிக்கப்பட்டுள்ள ராணுவம். சுதந்திரம் - என்று எவராவது மூச்சு விட்டால் அதுவே அவர்களது இறுதி மூச்சாக ஆகிவிடுகிறது.

ஆகஇ தமிழர்களை அடிமைகளாகவே வைத்திருப்பது சிங்கள இனமே தவிர சிங்கள அரசியல் தலைவர்கள் அல்ல! இந்த அளவுக்கு இனவெறி கொண்ட ஒரு சமூகம் தங்கள் தலைவனை தங்களது அடிமைகள் தீர்மானிப்பதை எப்படிப் பொறுத்துக் கொள்ளும்? இதைப் புரிந்து கொண்டுதான் அந்த இனவெறிக்குக் கொம்பு சீவுகிறான் தோல்வியடைந்த மகிந்தன். சொந்த இனத்தால் துரோகி முத்திரை குத்தப்பட்டுவிடுமோ என்கிற பயத்தில் நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருக்கிறார் வெற்றி வீரர் மைத்திரிபாலா.

தமிழர்களுக்கு ஆதரவாக மைத்திரி மூச்சு விட்டால்கூட போதும் மகிந்தனுக்கு! மைத்திரியால் நாடு உடைந்துவிடும் ஒருமைப்பாடு சிதைந்துவிடும் என்றெல்லாம் ஒப்பாரி வைத்து ஊரையே கூட்டிவிடுவான். பௌத்த சிங்கள இனவெறியிலேயே ஊறிப்போயிருக்கும் அப்பாவி மக்கள் அவன் சொல்வதை அப்படியே நம்புவார்கள். இதன் காரணமாக தன்னை ஜனாதிபதியாக்கிய தமிழினத்துக்கு ஒரு கரண்டி நெய் கூட ஊற்ற முடியாது மைத்திரியால்!

இன்னும் ஓரிரு மாதத்தில் இலங்கை நாடாளுமன்றத்துக்குத் தேர்தல். அதிபர் தேர்தலில் தோற்ற மகிந்தனுக்குச் சாதகமாக அனுதாப அலை அடித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் களம் அவனுக்குத்தான் சாதகமாக இருக்கும். அதிபர் தேர்தலிலேயே 91 தேர்தல் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பெற்றிருந்தான் மகிந்தன். 69 தொகுதிகளில்தான் மைத்திரியால் அவனை முந்த முடிந்தது.(மொத்தம் 160 தொகுதிகள்.) இப்போதுஇ 'தமிழர்களால் தான் தோற்றேன்' என்று மகிந்தன் தாரைதாரையாக வடிக்கும் கண்ணீர்இ மைத்திரியின் சிங்கள ஆதரவு தளத்தை ஒட்டுமொத்தமாகக் கரைத்துவிடும்.

அதிபரிடம் குவிந்திருக்கும் அதிகாரங்களைப் பறித்து முழு அதிகாரங்களையும் நாடாளுமன்றத்துக்கு வழங்கப் போவதாக ஏற்கெனவே வாக்குறுதி கொடுத்து விட்டார் மைத்திரி. அதன்மூலம் தனக்கான வலையைத் தானே விரித்துக்கொண்டார். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மகிந்தன் பிரதமராவதாக வைத்துக்கொள்வோம்..... அப்படியொரு நிலையில் அதிகாரம் எதுவும் இல்லாத டம்மி ஜனாதிபதியாக மைத்திரியும் முழு அதிகாரமும் கொண்ட பிரதமராக மகிந்தவும் இருப்பார்கள். எந்த அதிகாரங்களை அதிபர் மகிந்தனிடமிருந்து பறிப்பதற்காக மைத்திரி கோஷ்டி முயன்றதோ அந்த அதிகாரங்கள் முழுமையாகக் பிரதமர் மகிந்தனிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும். நடக்கப்போவது இதுதான்.

சிங்கள இனவெறியைத் தூண்டிவிடுவதன் மூலம் எளிதாக வெற்றிபெற்றுவிட முடியும் என்று மகிந்தன் நம்புவது மைத்திரிக்கு நன்றாகத் தெரியும். அந்த சிங்கள வெறியைத் தனக்குச் சாதகமாகத் திருப்ப மைத்திரி முயலக்கூடும். அதற்கான களமாக மார்ச் மாத ஜெனிவா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தை மைத்திரி பயன்படுத்தும் அபாயம் இருக்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் மேற்கத்திய நாடுகளையும் இந்தியாவையும் பயன்படுத்தி சர்வதேச விசாரணையின் பிடியிலிருந்து மகிந்த உள்ளிட்ட குற்றவாளிகளைக் கொஞ்சகாலத்துக்குத் தப்பிக்க வைக்க மைத்திரி முயலலாம். ஈழத்தைச் சேர்ந்த சில துரோகிகளும் 'ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவகாசம் கொடுங்கள்' என்று தமிழர் தரப்பிலிருந்தே வேண்டுகோள் விடுத்து சொந்த இனத்தைக் கழுத்தறுக்கலாம்.

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தனது இறுக்கத்தைத் தளர்த்தும் நிலையில் "இலங்கையின் இறையாண்மைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு வழிவிடாத மைத்திரி" என்று சிங்கள மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளப்படலாம். இப்படியொரு பிரச்சாரத்துக்கு நிச்சயமாக வாய்ப்பிருக்கிறது.

மைத்திரி தரப்பின் அந்த முயற்சி வெற்றி பெறுவது தமிழினத் துரோகிகளின் பங்கேற்பைப் பொறுத்தது. சமீப காலமாக சம்பந்தா சம்பந்தமில்லாமல் இந்தத் துரோகிகள் அடிக்கிற கூத்து நமது இந்த அச்சத்தை அதிகப்படுத்துகிறது. அப்படியொரு துரோகத்தை அவர்கள் செய்தால் அது அடிமைகளாக வாழ விரும்பாமல் முள்ளிவாய்க்கால் வரை நகர்ந்து சென்று 'சுதந்திர மனிதர்களாக' உயிர்நீத்த ஒன்றரை லட்சம் உறவுகளுக்குச் செய்கிற பச்சைத்துரோகம்.

ஈழத்தில் நடக்கிற அந்தத் துரோகம் ஒருபுறம் இருக்கட்டும். இங்கேயிருந்து நாம் செய்கிற துரோகத்தை எப்போது நாம் நிறுத்திக்கொள்ளப் போகிறோம்? 2009ல் இறையாண்மை என்கிற பெயரில் இலங்கை தன்னுடைய சொந்த மக்களைக் கொன்று குவித்தபோது தன் மக்களைக் கொல்லும் இலங்கையின் இறையாண்மையில் தலையிட முடியாது - என்கிற நயவஞ்சக வார்த்தைகளின் பின் பதுங்கிக் கொண்டோமே..... அந்த வரலாற்றுத் துரோகத்துக்குப் பரிகாரமாக என்ன செய்யப்போகிறோம்? சர்வதேச விசாரணைக்கு முட்டுக்கட்டை போட மோடி அரசும் முயலுமெனில் அதை ஒன்றுபட்டு எதிர்க்க என்ன செய்யப் போகிறோம்?

இவ்வளவு கேள்விகளுக்கிடையில்தான் சென்றவாரக் கேள்வி மீண்டும் எழுகிறது. ஜெனிவாவில் தன்னைக் காப்பாற்ற மைத்திரி எந்தவிதத்திலும் முயலப் போவதில்லை - என்று தெரிந்தால்இ சிங்கள இனவெறி பூதத்தை மார்ச் மாதத்துக்கு முன்பே அவிழ்த்துவிட மகிந்தன் - கோதபாய தரப்பு தயங்காது. தேர்தல் முடிவு முழுமையாக அறிவிக்கப்படுவதற்கு முன்பேஇ ராணுவத்தின் துணையுடன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முயன்றவர்கள் அவர்கள். அவர்களது தேச ஒற்றுமைஇ தேச பக்தி கோஷங்கள்தான் சாமானிய சிங்கள மக்களிடம் எடுபடும். (இங்கே மட்டும் என்ன வாழ்கிறது?)

இப்போதே மகிந்தனின் இனவெறி பெட்ரோலில் நனைந்து கொண்டுதான் இருக்கின்றன சிங்கள கிராமப்புறங்கள். நாட்டைக் காட்டிக்கொடுக்கும் விதத்தில் சர்வதேச விசாரணைக்கு வழிவிட மைத்திரி முயற்சிப்பதாக மகிந்த ஒரு வார்த்தை பேசினால் போதும்...... குப்பென்று பற்றியெறியும் இலங்கை.

2009ல் நடந்த இனப்படுகொலையின்போது அப்பாவித் தமிழர்களை மிருகங்களைப் போல் வேட்டையாடிக் கொன்ற ராணுவ 'வீரர்'களும் அப்பாவித் தமிழ்ச் சகோதரிகளைச் சீரழித்த ராணுவப் பேடிகளும் ஒட்டுமொத்தமாக மகிந்தனின் பின்தான் திரளுவார்கள். மானம் ரோஷம் சூடு சுரணை எதுவுமே இல்லாத சிங்களவர்கள் அந்தப் பொறுக்கிகளுக்குப் பின்தான் நிற்பார்கள். அதற்குப் பிறகு அலரி மாளிகையில் மைத்திரி இருக்க முடியுமா?

நன்றி - தமிழமக அரசியல்

0 Responses to மைத்திரி தாக்குப்பிடிப்பாரா? - புகழேந்தி தங்கராஜ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com