Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் புதிய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை செயலாக்க வேண்டும் என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் வலியுறுத்தியுள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடர் ஒன்றில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரித்தானியப் பிரமர் டேவிட் கமரூனுக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே பிரித்தானியப் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லெண்ண சமிக்ஞைகளை வரவேற்பதாகவும், ஜனாதிபதியின் அறிவிப்புக்கள் அனைத்தும் வாய்வார்த்தைகள் என்பதைத் தாண்டி செயல்களாக மாறுவதைக் காணவே பிரித்தானியா விரும்புவதாகவும் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையின் புதிய ஜனாதிபதி மீது பிரித்தானியா நம்பிக்கை கொண்டிருக்கின்றது. இலங்கைக்குள் இருக்கும் தமிழர்கள் தொடர்பாக புதிய ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் எமக்கு அந்த நம்பிக்கை அளிக்கின்றது.

மறுசீரமைப்பு தொடர்பான புதிய ஜனாதிபதியின் முன்முயற்சிகளை பிரித்தானியா ஆதரிக்கின்றது. மறுசீரமைப்பு, ஊழல் ஒழிப்பு, பிரிந்துகிடந்த இலங்கையை ஒன்றாக்குவதற்கான முயற்சிகள் என்பன கவனத்தில் கொள்ளக் கூடியது.

இலங்கையின் வடக்கே இராணுவத்தின் பயன்பாட்டுக்கு எடுக்கப்பட்டிருந்த நிலத்தில் ஒரு பகுதி தமிழர்களுக்கு திருப்பித் தரப்படுவது, சிவில் நிர்வாகத்தில் இருந்து இராணுவமயமாக்கலை அகற்றும் நோக்கில் ஆளுநர்களாக இருந்த இராணுவ உயர் அதிகாரிகளுக்கு பதில் சிவிலியன்களை ஆளுநர்களாக நியமித்திருப்பது, மீள்குடியேற்றத்துறைக்கு தமிழர் ஒருவரையே அமைச்சராக நியமித்திருப்பது போன்ற நவடிக்கைகளை இணைத்துப் பார்க்கும்போது இவை நல்ல ஆரம்பம்.

இலங்கையின் மீள் குடியேற்றம் மற்றும் இணக்கப்பாடு தொடர்பிலான இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தும் புதிய ஜனாதிபதி முன்னெடுக்கவேண்டும். அதற்குத்தேவையான ஒத்துழைப்பை பிரித்தானியா தொடர்ந்தும் வழங்கும்.” என்றிருக்கின்றார்.

முன்னதாக இலண்டனில் இருந்து வெளியாகும் தமிழ் கார்டியன் பத்திரிக்கையில் தனிக்கட்டுரை ஒன்றை எழுதியிருந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், இலங்கையின் போர்குற்றங்கள் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை ஏற்கவைப்பதிலும், தற்கால மனித உரிமைகள் நிலவரத்தை மேம்படுத்துவதிலும் பிரித்தானியா உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை திட்டமிட்டபடி இந்த மாதம் வெளியிடப்படாமை தொடர்பில் தமிழர்களின் கோபத்தை தாமும் பகிந்துகொள்வதாகவும் பிரித்தானியப் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

அதேசமயம், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கான கால அவகாசம் செப்டம்பர் வரை ஒத்திப்போடப்பட்டிருப்பதன் விளைவாக, இலங்கையின் புதிய அரசாங்கம் ஐக்கிய நாடுகளுடன் பேசவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான நம்பகத்தன்மை மிக்க உள்ளக விசாரணையை ஏற்படுத்தவும் இலங்கை அரசுக்கு வாய்ப்பு கிட்டியிருப்பதகாவும் தெிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள்ன மனித உரிமைகள் பேரவையில் செப்டம்பர் மாதம் இலங்கை தொடர்பான ஆய்வறிக்கை கண்டிப்பாக சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள டேவிட் கமரூன், அடுத்த ஆறுமாதங்கள் கழித்து மீண்டும் உலகின் கவனம் இலங்கைமீது படியும் என்றும் அப்போது இலங்கையானது தனது கடந்தகாலத்தை எதிர்கொள்ளக்கூடிய நாடாகவும், தனது மாறுபாடுகளை மறந்து தன்னை மறுசீரமைத்துக்கொள்வதன் மூலம் வளமான எதிர்காலத்தை உறுதி செய்யக்கூடிய நாடாகவும் இருக்கவேண்டும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

0 Responses to இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: டேவிட் கமரூன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com