Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துவதற்காக சொலிசிட்டர் ஜெனரலினால் (Solicitor General) குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர், குற்றப் புலனாய்வு பிரிவு, சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினரை இந்தக் குழு உள்ளடக்கியுள்ளது.

இந்தக் குழு எதிர்வரும் 16ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு முதன் முதலில் கூடி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்துவது குறித்து ஆராயும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சொலிசிட்டர் ஜெனரல் சுகத் கம்லத்தை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்து நீண்டநேரம் கலந்துரையாடியதாகவும், இந்தச் சந்திப்புக்கு அமையவே குழுவொன்றை அவர் நியமித்திருப்பதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை துரிதப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. இது தொடர்பாக ஆராய்ந்து அரசியல் கைதிகளை எந்த அடிப்படையில் துரிதமாக விடுவிக்கலாம் என்பது குறித்து கலந்துரையாடுவதற்கு சிறிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளைப் பொறுத்த வரையில் மூன்று பிரிவினராக நாம் பார்க்கின்றோம். வழக்கு விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டவர்கள், வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருபவர்கள் மற்றைய குழுவினர் எதுவித வழக்கும் தாக்கல் செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள். இவர்களை எந்த அடிப்படையில் விடுவிப்பது என்பது குறித்து இக்குழு ஆராயும்.” என்றுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் பலவந்தமாக புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த எம்.ஏ.சுமந்திரன், “புனர்வாழ்வு என்பது கைதிகளின் விருப்பத்துக்கு மாறாகத்தான் செய்யப்படுகிறது. ஆனால், புனர்வாழ்வு என அனுப்பப்படுகின்றபோது, ஆறு மாதங்களுக்குப் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவார்கள் ஆயின் ஆறு மாதங்களின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற நிச்சயம் எமக்கு உள்ளது.

புனர்வாழ்வுக்கு அனுப்பப்படாமல் இருந்தால் இரண்டு மூன்று வருடங்கள் தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்கான நிலைமையும் காணப்படுகிறது. புனர்வாழ்வு நடவடிக்கைகளின் மூலமே 900ற்கும் அதிகமாக இருந்த அரசியல் கைதிகளின் எண்ணிக்கையை 300 ஆகக் குறைக்க முடிந்துள்ளது. புனர்வாழ்வுக்கு அனுப்பும் விடயத்தை சட்டப்படியாக ஏற்றுக்கொள்ள முடியாது இருந்தாலும், குறிப்பிட்ட காலத்துக்கு புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவார்கள் ஆயின் அந்தக் காலத்தின் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்ற நிச்சயம் உள்ளது” என்று பதலளித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது. எந்தெந்த சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர் என்ற முழு விபரங்களும் எம்மிடம் உள்ளன. பயங்கரவாதம் தற்பொழுது இல்லை. இறுதி யுத்தத்தில் ஆயுதமேந்திப் போராடியவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதே தமது உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த சொலிசிட்டர் ஜெனரலினால் குழு நியமனம்: சுமந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com