Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கு வளலாய் பகுதியில் 1000 ஏக்கர் காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ள பிரதேசங்களை நாளை வெள்ளிக்கிழமை மக்கள் சென்று பார்வையிட்டு காணிகளை உறுதிப்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற செயலணி அறிவித்துள்ளது.

வலிகாமம் வடக்கு வளலாய் பகுதியில் 1000 ஏக்கர் காணியில் மக்களை மீள்குடி யேற்றுவதற்கான நடவடிக்கைகள் மீள்குடியேற்ற அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை மீள் குடியேற்ற செயலணியின் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் கரீம் பீரிஸ் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், தெல்லிப்பளை மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலின்போது மீள்குடியேற்ற செயலணியின் தலைவர் கரீம் பீரிஸ் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு அமைய, யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் 1000 ஏக்கர் காணிகளில் மிக விரைவில், மீள்குடியேற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் ஒத்துழைப்புடன் நாளை வெள்ளிக்கிழமை வளலாய் பகுதியில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் தமது காணிகளை சென்று பார்வையிட முடியும்.

அந்த வகையில், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு அந்தந்த பகுதிகளில் மக்கள் சென்று பார்வையிட முடியுமென்றும் தமது காணிகளை அடையாளப்படுத்திக்கொள்ள முடியுமென்றும் அவர் கூறினார்.

அத்துடன், கோப்பாய் பிரதேச செயலர் பிரதீபன் தெரிவிக்கையில், வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில். ஜே. 84 வளலாய் கிராம சேவையாளர் பிரிவில் ஒரு பகுதி மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளது.

அந்த பகுதியில், பதிவு செய்யப்பட்ட 272 குடும்பங்களின் வதிவிடங்களும் விவசாய காணிகளும் காணப்படுகின்றன. 233 ஏக்கர் வளலாய் பகுதியில் ஆரம்ப நடவடிக்கைகள் 253 குடும்பங்கள் சார்ந்த 920 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள். அந்த பிரதேசத்திற்கு சென்று பார்வையிட்டு காணிகளை உறுதிப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை காங்கேசன்துறை வீதி தொண்டமானாறு சந்தி அமைவிடத்தில் பொது மக்களை ஒன்று கூடுமாறும், பிரதேச செயலக அலுவலர்களின் மூலம் சீரான முறையில் பதிவுகளை மேற்கொண்டு தேவையான தகவல்கள் பதிவு செய்யப்படும்.

அதன் பின்னர், காணி உரிமையாளர்களினால் தமது காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அப்பகுதியில் மீள்குடியேற்றம் செய்வதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வெள்ளிக்கிழமை முதல் மக்கள் தமது காணிகளை காலையில் இருந்து மாலை வரை சென்று பார்வையிட முடியும். முன்னோடி நடவடிக்கைகளாக காணிகளை உறுதிப்படுத்தவும் காணிகளை துப்புரவு செய்யவும் முடியும். இந்தமாத இறுதிக்குள் மீள்குடியேற்றத்திற்கான இறுதி திகதி அறிவிக்கப்படும்.

மாத இறுதிக்கு ஒரு நாளில் நடாத்தப்படும் குறிக்கப்பட்ட 6 கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும், மார்ச் 31 ஆம் திகதி ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் பூரணப்படுத்தப்பட்டு, ஒரு நாளில் 1350 குடும்பங்களும் தமது சொந்தக்காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என மீள்குடியேற்ற செயலணி தலைவர் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும் உறுதியளித்தனர்.

0 Responses to வலி. வடக்கு மீள்குடியேற்ற பிரதேசங்களை பார்வையிட மக்களுக்கு அனுமதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com