Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமராக பதவி வகித்த 2004ஆம் ஆண்டு காலத்தில் சுனாமி நிதியுதவியாகக் கிடைத்த 82 மில்லியன் ரூபாவை தனது தனிப்பட்ட கணக்கில் வைப்புச் செய்து பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவித்து பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேற்படி நிதி மோசடி தொடர்பாக, 2004ஆம் ஆண்டிலேயே அமைச்சர் கபீர் ஹாசிம் இலஞ்ச ஒழிபு ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்திருந்தார். அவர் செய்த முறைப்பாட்டுக்கு எதுவித விசாரணைகளும் நடைபெறவில்லை. எனவே, இது தொடர்பாக உரிய விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரியே பிரதியமைச்சர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

82 மில்லியன் ரூபா நிதி மோசடியில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை காப்பாற்றிவிட்டதாகக் கூறிய கருத்தையும், தகவல்களையும் ஆணைக்குழுவுக்கு ரஞ்ஜன் ராமநாயக்க ஆதரமாக சமர்ப்பித்துள்ளார்.

2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி பேரழிவுக்கு மேற்குறிப்பிட்ட 82 மில்லியன் ரூபாவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக இருந்தபோதும் அவற்றை மஹிந்த ராஜபக்ஷ தனது தனிப்பட்ட கணக்கில் வைப்புசெய்தமை மோசடி என்று தெரிவித்த ரஞ்ஜன் ராமநாயக்க, 82 மில்லியன் ரூபாவும் பின்னர் சுனாமி பேரழிவின் எந்தப் பகுதிக்கு எதற்காக செலவுசெய்யப்பட்டது என்பதையும் விசாரணை செய்யவேண்டுமென முறைப்பாட்டில் கோரியுள்ளார்.

எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட கணக்கிற்கு வைப்பிலிடுவதற்கு எந்த விதத்திலும் உரிமை இல்லை. எனினும், அவ்வாறு அவர் வைப்பு செய்வதற்காக காரணம் என்ன என்பதையும் விரிவாக விசாரணைக்கு உட்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்குச் சென்ற பிரதியமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க, முறைப்பாட்டை கையளித்த பின், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரழிவின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கு வெளிநாடுகளிலிருந்து பெருந்தொகையான பணம் கிடைத்தது. இவற்றில் 82 மில்லியன் ரூபா ‘ஹெல்பிங் அம்பாந்தோட்டை’ என்ற திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ அன்று ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு தெரியப்படுத்தாமல் 82 மில்லியன் ரூபாவையும் தனது தனிப்பட்ட கணக்கில் வைப்புச் செய்துகொண்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கபீர் ஹாசிம் இரகசியப் பொலிஸாருக்கு முறைப்பாடொன்றைச் செய்திருந்தார். பின்னர் நடைபெற்ற விசாரணைகளின் போது இந்தப் பணம் சட்டரீதியாக வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி முறைப்பாடு செய்த கபீர் ஹாசிமிடமிருந்து விசாரணைகள் நடத்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரிடமிருந்தும் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் அறவிடப்பட்டது.

அடிப்படை மனித உரிமைகள் மனு வொன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தே இந்த பணத்தை அறவிட்டுக் கொண்டார் என்றும் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட கணக்கில் வைக்கப்பட்டிருந்த பணத்தை வேறு கணக்கொன்றுக்கு மாற்றி பின்னர் ராஜபக்ஷ ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் வேறு தனிப்பட்ட வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to ‘ஹெல்பிங் அம்பாந்தோட்டை’ நிதி மோசடி; மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக முறைப்பாடு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com