Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எமது நாட்டில் மீண்டுமொரு யுத்த சூழல் ஏற்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மீண்டும் யுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்கு குண்டுகளும், துப்பாக்கிகளும் எமக்கு உதவாதவை. பதிலாக மொழி, மத பேதங்களைக் களைந்து எல்லா மக்கள் மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலமே அமைதி சூழலை உருவாக்கமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற 'பாஸ்கா பண்டிகை' நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேவையான முக்கிய அம்சங்களில் மதமும்- மதக்கோட்பாடுகளும் முதன்மை பெறுகின்றன. நல்லவர்களை சமூகத்தில் உருவாக்குவதற்கே மதங்கள் போதிக்கப்படுகின்றன. ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு எங்களுக்கு மதரீதியான ஒரு நோக்கு இருக்கவேண்டும்.

இயேசுபிரான் எமக்குக் காட்டிய வழி மனிதாபிமான - மனிதநேயம்கொண்ட - சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான வழியென்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒரு சமூகத்தையோ நாட்டையோ கட்டியெழுப்பப்புவதற்கு சமாதானம் மிகமிக அவசியம். இதற்கு மனிதன் மனிதனாக மற்றைய மனிதன் மீது அன்பு, இரக்கம் காட்டவேண்டும். அப்போது சமூகத்தில் இருக்கின்ற மற்றையவர்களும் மற்றவர்கள் மீது அன்பு, இரக்கம் காட்டுவார்கள்.

இந்த நாட்டில் பன்மொழி, பல்மத மக்கள் வாழ்கின்றனர். அவ்வாறான மக்களுக்கு தங்களது மதங்களை பின்பற்றுவதற்கான, மொழியைப் பேசுவதற்கான முழுமையான சுதந்திரம் இருக்கவேண்டும். எனவே, எமது அரசாங்கம் எல்லா மக்கள் மத்தியிலும் சகவாழ்வையும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளக்கூடிய புரிந்துணர்வையும் உருவாக்கவே முயற்சிக்கிறது.

இந்த நாட்டில் எவரும் சந்தேகத்தோடும், பீதியோடும் வாழும் அவசியம் இல்லை. மாறாக அனைத்து மக்களும் அன்போடும் புரிந்துணர்வோடும் வாழக்கூடிய சூழ்நிலையை எமது புதிய அரசாங்கம் உருவாக்கும்.” என்றுள்ளார்.

0 Responses to நாட்டில் மீண்டுமொரு யுத்த சூழல் ஏற்பட இடமளியோம்: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com