Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இனவாதம் எது, மதவாதம் எது, இனவுரிமை எது, மதவுரிமை எது என்பது பற்றி இந்நாட்டு அரசியல், மத தலைவர்கள் குறிப்பாக பெரும்பான்மை தரப்பை சேர்ந்தவர்கள் விளங்கி கொள்ள வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தட்டி பறிக்கப்படும் நமது உரிமைகளுக்காக தமிழ் பேசும் மக்கள் குரல் எழுப்புவது, போராடுவது, எழுதுவது இனவாதம் அல்ல. அடுத்த இனத்தின் உரிமைகளை தட்டி பறிப்பது, வெட்டிக்குறைப்பது இனவாதம் ஆகும். இந்த தெளிவு அரசாங்கத்திலும், எதிர்கட்சியிலும் இருக்கின்ற பெரும்பான்மை கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் இருக்கவேண்டும். இந்த தெளிவுடன்தான் இனவாதக் கருத்துக்களுக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இந்த சட்டம் நல்லது. ஆனால், இந்த தெளிவு சிலருக்கு இல்லை. ஆகவே இனவாதம், மதவாதம் பேசினாலோ, எழுதினாலோ இரண்டு வருடம் சிறைதண்டனை என்று குற்றவியல் சட்டக்கோவையில் திருத்தம் கொண்டு வர அமைச்சரவை முடிவு செய்திருப்பதை எச்சரிக்கையுடன் வரவேற்கின்றேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணி தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்த நாட்டில் இன, மதவாதம் பல்வேறு ரூபங்களில் இருக்கின்றது. வெறுமனே கோவில்களையும், பள்ளிகளையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும் இடிப்பது மாத்திரம் இனவாதம் அல்ல. இந்நாட்டில் ஜனத்தொகையை கணக்கிட்டு, கொழும்பு மாவட்டத்தில் மூவர், நுவரேலியா மாவட்டத்தில் ஐவர், பதுளையிலும், கண்டியிலும் தலா இருவர் என தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் முகமாக புதிய தேர்தல் முறையில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என கூறினால் கொழும்பிலும், மலையகத்திலும் அரசியல் செய்கின்ற சிலருக்கு கோபம் வருகிறதாம்.

இவர்கள் யார்? இவர்கள், தேர்தல் காலங்களில் தமிழ் வாக்குகளை குறி வைத்து, தமிழர்களை வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்துகின்றவர்கள் ஆகும். இங்கே யார் இனவாதி? எனது இனத்தின் உரிமையை உறுதிபடுத்த விளையும் நான் இனவாதியா? அல்லது எங்கள் வாக்குகளை தட்டி பறித்து ருசி பார்க்க துடிக்கும் இவர்கள் இனவாதியா?

இன்று யுத்தம் இல்லை. புலிகளும் இல்லை. அவர்களது எறிகணைகளும் இல்லை. ஆகவே அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்கான தேவையும் இல்லை. ஆகவே எங்கள் நிலங்களை திருப்பி கொடுங்கள் என்று நாம் கோருவது எப்படி இனவாதமாகும்? இதையும் இனவாதமாக காட்ட சிலர் முயல்கிறார்கள். முஸ்லிம் சகோதர்களின் பள்ளிகளை உடைக்காதே என்று நான் சொன்னால், என்னை பார்த்து முதலில் சுன்னத் செய்துவிட்டு வந்து பிறகு முஸ்லிம்களை பற்றி பேசுங்கள் என்று சொல்லுபவர் இனவாதியா? அல்லது முஸ்லிம் சகோதர்களுக்காக குரல் எழுப்பும் நான் இனவாதியா?

இலங்கை தாய் திருநாட்டை சிலாகிக்கும் தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை பாடுவது மீதான அதிகாரபூர்வமற்ற தடையை நீக்குங்கள் என்று நான் ஜனாதிபதியை கேட்டேன். அவரும் உடன்பட்டார். அதன் பிறகு இந்த தடை நீக்கம் என்ற செய்தி உலகம் முழுக்க போனது.

அதை நமது புதிய அரசின் நல்லெண்ண செயற்பாட்டின் அடையாளம் என்று நமது வெளிவிவகார அமைச்சர் ஜெனீவாவில் சென்று சொல்கிறார். நமது பிரதமர் அதை யாழ்ப்பாணத்தில் நினைவூட்டுகிறார். இந்நிலையில் நேற்று முதல்நாள் தேசிய நிறைவேற்று சபை கூட்டம் முடிந்த பின் என்னிடம் வந்த ஒரு பெரும்பான்மை அரசியல்வாதி இரகசியமாக ஒரு வேண்டுகோளை விடுக்கின்றார்.

அது என்ன வேண்டுகோள்? "மனோ, நீங்கள் கடந்த முறை இங்கே தமிழில் தேசிய கீதம் பாடும் விவகாரம் பற்றிய பிரச்சினையை எழுப்பினீர்கள். இனி இப்படியான சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை எழுப்பாமல் இருங்கள். அது நமது ஜனாதிபதியை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி விட்டது" என்று அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

தமக்கு தர்மசங்கடம் என்று ஜனாதிபதி என்னிடம் சொல்லவில்லை. அவரிடம் அப்படியான ஒரு அடையாளம் கூட தெரியவில்லை. ஆனால், அந்த அரசியல்வாதி என்னிடம் இப்படி சொல்கிறார். அவருக்கு நான் என்ன பதில் சொன்னேன் வேறு விடயம்.

ஆனால், தமிழ் மொழியில் இலங்கை தேசிய கீதம் பாடுவதை பற்றிகூட பேசாதீர்கள் என சொல்லும் இவர்கள் இனவாதிகளா? தாய் நாட்டை பற்றி தாய்மொழியில் தேசிய கீதம் பாடும் உரிமையை கோரும் நான் இனவாதியா? இவைபற்றி நாம் சிந்திக்க வேண்டும். இனவாதம் எது என்பது பற்றி அனைவருக்கும் அறிவுறுத்த வேண்டும். எச்சரிக்கையுடன் இந்த சட்டங்களை வரவேற்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to இனவாதம் எது, இனவுரிமை எது என்பது பற்றி பெரும்பான்மை தரப்பினர் விளங்கிக் கொள்ள வேண்டும்: மனோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com