Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டிலுள்ள 62 இலட்சம் மக்களின் ஆணையைப் பெற்றே ரணில் விக்ரமசிங்க பிரதமரானார் என்று ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளர், ரணில் விக்ரமசிங்க புதிய அரசாங்கத்தில் பிரதமர் என்று தெரிவித்தே நாம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பிரசாரங்களை முன்னெடுத்தோம். இதனடிப்படையிலேயே மக்கள் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், ரணில் பிரதமராவதை மக்கள் விரும்பாவிட்டால், 62 இலட்சம் வாக்குகள் கிடைத்திருக்காது என்று சுட்டிக்காட்டிய ஊவா மாகாண முதலமைச்சர், இது வெறுமனே கிடைக்கப்பெற்ற பிரதமர் பதவியல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வெறுமனே கிடைக்கப்பெற்றதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவோம் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குவோம் என்றும் தெரிவித்தே ஜனாதிபதி தேர்தலில் பிரசாரங்களை முன்னெடுத்தோம்.

62 இலட்சம் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக வாக்களித்து தேர்தலில் வெற்றி பெற வைத்தார்கள். அவ்வாறே, பிரதமரை தெரிவு செய்யவும் சந்தர்ப்பம் வழங்கினார்கள். இவ்விதம் இருக்கும் போது எவ்வாறு வெறுமனே பிரதமர் பதவி கிடைக்கப் பெற்றதென்று அமைச்சர் டிலான் பெரேரா கூற முடியும்.

தேர்தல் காலங்களில் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக செயற்பட்ட அவர் ஒரு மாத காலத்தில் அவரின் வாகனத்துக்கு எண்ணெய் நிரப்ப முடியாமல் போன போது அமைச்சு பதவியை பெற்றுக் கொண்டு சுகபோகம் அனுபவிக்கிறார். அவ்வாறே, அவருடைய தந்தையும் மஹிந்த ராஜபக்ஷவை வெற்றி பெற முழுமூச்சாக இருந்துவிட்டு ஆளுநர் பதவியை பெற்றுக் கொண்டுள்ளார்.

இவர்களுக்கு கிராமத்துக்கு நேரடியாக சென்று மக்களிடம் வாக்களிக்குமாறு கேட்க முடியாது. ஏனெனில், அவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள். அவ்வாறே, மஹிந்த ராஜபக்ஷவை விற்பனை செய்து அரசியல் நடத்தும் இவர்களுக்கு மக்கள் மத்தியில் நேரடியாக செல்லமுடியாது.

நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்தி அச்சமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ள இந்த அரசாங்கம் 100 நாட்களில் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வெற்றி நடை போடுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்ற தனிநபரின் ஏகாதிபத்திய ஆட்சியை ஒழித்து ஊழல், மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்ற நோக்கத்திலேயே ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்பட்டார்.

மைத்திரிபால சிறிசேன - மஹிந்த ராஜபக்ஷ இருவரும் சந்திக்கும் விடயத்தை அரசியல் இலாபம் தேடும் நோக்கத்தில் அமைச்சர் கருத்து வெளியிட்டிருப்பது அவரது இயலாமையை வெளிப்படுத்துவதாகும். 62 இலட்சம் மக்களின் நம்பிக்கைக்கு எதிராக ஒருபோதும் செயற்படமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமையானது நாட்டில் நல்லாட்சிக்கு ஊழல், மோசடிக்காரர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றது.” என்றுள்ளார்.

0 Responses to 62 இலட்சம் மக்களின் ஆணையுடனேயே ரணில் பிரதமரானார்: ஹரீன் பெர்ணான்டோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com