Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழ்நிலையை தமிழ்த் தரப்பு சரியாக பயன்படுத்தி, நல்லதொரு தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான இரண்டு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜோன் கெரி, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜோன் கெரியுடனான இன்றை சந்திப்பு பற்றி கருத்து வெளியிட்டுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், “இந்தச் சந்திப்பின்போது இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல் குறித்து நம்பகத்தன்மையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதை தமிழ்த் தரப்பு விரும்புகிறது என்றும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் நாம் கேட்டுக்கொண்டோம்.

வடக்கில் படைக்குவிப்பு இதுவரை குறைக்கப்படவில்லை. முன்னர் போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகளின் தொலைதூர எறிகணைகளைக் காரணம் காட்டி இராணுவத்தினர் அதிகளவான காணிகளை பொதுமக்களிடமிருந்து தம்வசப்படுத்தியிருந்தனர். தற்போது அப்படியொரு அபாயம் இங்கில்லை. எனவே அந்தக் காணிகளை பொதுமக்களிடம் இராணுவத்தினர் கையளிக்கவேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

இராணுவத்தினரே முடிவெடுக்கும் சக்தியாக இருக்கின்றனர். இந்த நிலைமை மாற்றப்பட்டு அரசியல் ரீதியாக தீர்க்கமான முடிவொன்றை இலங்கை அரசு அறிவிப்பதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கவேண்டும். வடக்கிலிருந்து படைகள் நீக்கப்பட்டு அனைத்து மக்களும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த இலங்கை அரசை அமெரிக்கா கோரவேண்டும் என்று நாம் அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் எடுத்துக்கூறினோம்.

எமது கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அவர், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை தமிழர் தரப்பினர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்.” என்றுள்ளார்.

இதனிடையே இன்று பிற்பகல் இலங்கைக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, கென்யாவை நோக்கி பயணமாகியுள்ளார்.

0 Responses to புதிய அரசியல் சூழ்நிலையை தமிழ்த் தரப்பு சாதகமாக கையாள வேண்டும்: கூட்டமைபுவிடம் ஜோன் கெரி வலியுறுத்தல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com