Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேர்தல் சீர் திருத்தங்களை உள்ளடக்கிய 20வது திருத்தச் சட்டம் தொடர்பில் சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் முன்வைத்த யோசனைகளை அமைச்சரவை உபகுழு ஏற்றுக் கொண்டுள்ளது.

தொகுதி மீளமைப்பு, தனித்தொகுதிகள் உருவாக்கம் மற்றும் பல்-அங்கத்தவர் தொகுதிகள் உருவாக்கப்படுவது போன்ற விடயங்களில் சிறுபான்மை கட்சிகள் முன்வைத்த யோசனைகளை அமைச்சரவை உப குழு ஏற்றுக் கொண்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, எஸ்.பி. திசாநாயக்க, கயந்த கருணாதிலக்க, கபீர் ஹஷீம், ரவுப் ஹக்கீம், பழனி திகாம்பரம் ஆகியோர் அடங்கிய அமைச்சரவை உபகுழு ஒன்று அண்மையில் அமைக்கப்பட்டது.

இந்த உபகுழு முதல்முறையாக நேற்று வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது, இதில் அமைச்சர் பழனி திகாம்பரம் வெளிநாடு சென்றுள்ளதால் அவருக்கு பதிலாக உபகுழுவின் ஒப்புதலுடன் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில், “நேற்றைய கூட்டம் திருப்திகரமானது. 20வது திருத்த நகல் சட்டமூல யோசனைகளை கடந்த சில வாரங்களாகவே நாம் கலந்துரையாடி நமது எதிர்பார்ப்புகளை அதில் உள்நுழைத்துள்ளோம். இதில் மலையகம் மற்றும் மேல்மாகாணம் உட்பட பிரதான தென்னிலங்கை மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் புதிய தனித்தொகுதிகள் மற்றும் பல் அங்கத்தவர் தொகுதிகள் உருவாக்கப்பட வழிசமைக்கும் தொகுதி மீள் நிர்ணயமே மிகவும் அவதானத்துடன் கண்காணிக்கப்பட வேண்டியது ஆகும்.

இன்றைய 160 தொகுதிகளுக்கு மேலதிகமாக புதிய தனித்தொகுதிகளையும், பல்-அங்கத்தவர் தொகுதிகளையும் உருவாக்கும் நமது வலியுறுத்தல்களை பலத்த கலந்துரையாடல்களுக்கு பின்னர் அமைச்சரவை உபகுழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது. அதேபோல், மீள் நிர்ணய ஆணையத்தில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள ஐந்து உறுப்பினர்களுக்கு மேலதிகமாக இன்னும் நான்கு கண்காணிப்பளர்களை நியமிக்கவும் உடன்பாடு காணப்பட்டது.

இது தொடர்பில் நாம் முன்வைத்த யோசனை பலத்த வாதப்பிரதிவாதங்களுக்கு பின்னர் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆணைகுழுவில், தொகுதி மீள் நிர்ணயங்கள் ஆராயப்பட்டு தீர்மானிக்கப்படும்போது, இக்கண்காணிப்பாளர்கள் தென்னிலங்கை மலையக தமிழ் சிறுபான்மை, முஸ்லிம், வடகிழக்கு தமிழர், வடகிழக்கு சிங்கள சிறுபான்மை ஆகிய பிரிவினரின் நலன்களை கண்காணிப்பார்கள்.

சிறுபான்மையினர் சார்பாக நாம் முன்வைத்த யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசுகள் மேலும் கலந்துரையாடப்பட்டு அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும். அதன்பிறகு அது சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும்.” என்றுள்ளது.

0 Responses to தேர்தல் திருத்தம் தொடர்பிலான சிறுகட்சிகளின் யோசனைகளை அமைச்சரவை உபகுழு ஏற்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com