Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

20வது திருத்தச் சட்டமூலத்தினூடு செய்யப்படவுள்ள தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றை இலங்கைத் தமிழரசுக் கட்சி அமைத்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று திங்கட்கிழமை கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. அதன்போதே, மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “மத்திய குழுக் கூட்டத்தில் முக்கியமாகத் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டன. விசேடமாக 19வது திருத்தச் சட்டத்தின் விடயங்கள், அதனால் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. அத்துடன் இனி வரவுள்ள தேர்தல் முறை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

தேர்தல் முறை தொடர்பில் ஆராய்ந்து அதன் நன்மை, தீமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. மேலும், இதில் எம்மால் சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு இரு வாரத்திற்குள் இது தொடர்பாக ஆராய்ந்து தமது அறிக்கையை சமர்ப்பிக்கும்.

அரசியல் நிலை சம்பந்தமாகவும் அடுத்து வரவுள்ள தேர்தல் காரணமாகவும் எமது நிலைப்பாடு தொடர்பாக கிராம மட்டத்தில் சென்று மக்கள் மத்தியில் கருத்துக்களை கொண்டு செல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சி சம்பந்தமாக முன்வைக்கப்படும் பொய் பிரச்சாரங்கள் குறித்து மத்திய குழு உறுப்பினர்கள் அவதானமாக இருந்து தேவையேற்படின் பதில் அளிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதைவிட, கட்சி விதிகளை மீறியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. முக்கியமாக மாந்தை கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனை ஏற்று தேர்தல் ஆணையாளரும் கடிதம் அனுப்பியுள்ளார். கட்சி விதிகளை மீறிய ஏனையவர்கள் தொடர்பாக விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பதில் அனுப்பியவர்கள் தொடர்பில் பரிசீலித்து வருகின்றோம். பதில் அனுப்பாதவர்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியாக மத்திய குழு தீர்மானித்துள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஆராய தமிழரசுக் கட்சி குழு அமைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com