Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவில் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தென்மலை உள்ளது.

இங்கு மத்திய அரசுக்கு சொந்தமான ஆர்.பி.எல். எனப்படும் இறப்பர் தோட்டம் உள்ளது. சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் இறப்பர் மரங்கள் உள்ளன.

இங்குள்ள இறப்பர் தொழிற்சாலையில் இருந்து பால் எடுக்கப்பட்டு மும்பை, புனே போன்ற நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது.

இங்கு கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அகதிகள் 650 குடும்பங்களாக வந்து தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

தற்போது இந்த குடும்பங்கள் பெருகி 1,500 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து கேரள மாநில அரசும், இதனை பராமரித்து வருகிறது.

இந்த தொழிலாளர்களுக்கு தினமும் ரூ.300 சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் இருந்து தான் பி.எப் போன்ற பிடித்தங்கள் பிடிக்கப்படுகின்றன.

இந்த சம்பளத்தில் தான் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தை நடத்துகிறார்கள். ஒரு வீட்டிற்கு 2 பேர் மட்டும் தான் வேலை செய்ய முடியும். இது இந்த கம்பெனியின் விதி.

இந்த சம்பளம் இவர்களது குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை.

இவர்களது தேவைகளுக்காக யாரும் போராட முடியாத சூழ்நிலையில் உள்ளதாகவும், தாங்கள் அடிமை போல் நடத்தப்படுவதாகவும் இந்த பகுதியில் வாழும் இலங்கை அகதிகள் கூறுகின்றனர்.

இங்குள்ள தொழிலாளர்களுக்கு புற்று நோய் அதிகமாக வருகிறது என்று கூறப்படுகிறது. 35 சதவீதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இறந்தவர்களில் பெரும்பாலானோர் புற்று நோயால் தான் இறந்துள்ளனர்.

ஒன்றரை வருடத்திற்கு முன்பு 18 வயது வாலிபர் நிஷாந்த் என்பவர் புற்று நோயால் இறந்துள்ளார். இந்த நோய் பரவ கூடிய நோய் அல்ல. ஆனால் சிறு குழந்தைகளுக்கும் இந்த நோய் உள்ளது என்று அந்த தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த நோய் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளால் தான் வருகிறது என்கிறார்கள் ஒரு சிலர். வேறு சிலர் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் வருகிறது என்கிறார்கள். இறப்பர் மரத்தில் இருந்து அதிக பால் எடுப்பதற்காக எத்திப்போன் என்ற ரசாயன மருந்து உபயோகிக்கப்படுகிறது.

இது விஷத்தன்மை கொண்டதாகும். இதனால் கூட இந்த நோய் வரலாம் என்றும் கூறுகிறார்கள். அடிக்கடி புற்று நோய்க்காக மருத்துவ முகாம்கள் போடப்படுகின்றன. ஆனால் நோய் உருவாவதற்கான காரணம் கூற முடியவில்லை.

கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டம் கோனி என்ற இடத்தில் உள்ள கல்லெலி எஸ்டேட்டில் இறப்பர் ஷீட் தொழிற்சாலை உள்ளது. இந்த பகுதிகளிலும் புற்று நோய் பலருக்கு வந்துள்ளது.

ஆனால் கேரள மாநிலத்திலேயே புற்றுநோயால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் தென்மலையில் இந்த பகுதியில் இருப்பதாக இங்குள்ள மருத்துவ குறிப்பீட்டில் பதிவு செய்துள்ள தகவலும் உள்ளது.

இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த தனலெட்சுமி கூறுகையில்,

நாங்கள் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்த எஸ்டேட்டிற்கு இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தோம். எனது கணவர் பெருமாள் புற்றுநோயால் இறந்து விட்டார். இந்த பகுதியில் பெரும்பாலானோருக்கு புற்று நோய் உள்ளது என்றார்.

பூபதியம்மாள் என்பவர் கூறுகையில்,

இங்குள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் இதனால் உடல் நலம் கெடுகிறது என்று குறிப்பிட்டார்.

இதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் கூறுகையில்,

இதுதொடர்பாக நாங்கள் கணக்கெடுத்ததில் இங்குள்ள தொழிலாளர்களில் 35 சதவீதம் பேருக்கு புற்று நோய் இருப்பதாக தெரிய வந்துள்ளளது. பலர் தங்களுக்கு இந்த நோய் உள்ளதை வெளியில் சொல்வதற்கு வெட்கப்பட்டு ரகசியமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலை நீடித்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் இங்குள்ள எல்லோருக்கும் இந்த நோய் வந்து விடும் என்று அச்சமாக உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து ஆய்வு செய்ய மருத்துவ குழு ஒன்றை நியமனம் செய்து ஆய்வு நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டுமென  கூறினார்.

பாக்கு, புகையிலை போன்றவை உபயோகிப்பதால் புற்று நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் குழந்தைகள், பெண்களுக்கு இந்த பழக்கம் இல்லாதவர்களுக்கு புற்று நோய் வருவது புரியாத புதிராக உள்ளது.

மத்திய மாநில அரசுகள் இந்த நோயை ஒழிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அறுவை சிகிச்சை தேவைப்படுகிறவர்களுக்கு நிதி உதவி அரசு அளிக்க வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Responses to இந்தியாவில் இறப்பர் தோட்டத்தில் அடிமைகளாய் நடத்தப்படும் இலங்கை அகதிகள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com