Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட 20வது திருத்த யோசனையில் உள்ளடங்கியுள்ள தொகுதிகள் 125 + மாவட்ட விகிதாசாரம் 75 + தேசிய விகிதாசாரம் 25 என்ற புதிய கணக்கை தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்காது என்று அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எங்கள் கூட்டணியின் கடும் எதிர்ப்பை கட்சியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரம் நேற்றைய அமைச்சரவை கூட்டத்திலேயே எடுத்து கூறியுள்ளார் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் த.மு.கூ தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, “புதிய நிலைமைகளை ஆராய்வதற்காக சிறு கட்சிகளின் பேரவை கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை 11ஆம் திகதி கூட்டப்படவுள்ளது. திங்கட்கிழமை காலை வரை நாம் ஜனாதிபதியால் கட்சி தலைவர்களுக்கும், அமைச்சரவைக்கும் வழங்கப்பட்ட யோசனைகளையே பரிசீலித்து வந்தோம். அந்த யோசனையில் தொகுதிகள் 165 + மாவட்ட விகிதாசாரம் 31+ தேசிய விகிதாசாரம் 59 என்றே இருந்தது.

இந்நிலையில் திடீரென திங்கட்கிழமை மாலை புதிய கணக்கு அமைச்சரவைக்கு வந்துள்ளது. 20வது திருத்தத்தின் அடிப்படை விருப்பு வாக்கு முறைமையை அகற்றுவதும், தொகுதிக்கு ஒரு எம்பியை தெரிவு செய்வதும் ஆகும். இதை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். அதில் மீள் நிர்ணய ஆணைக்குழுவின் மூலம் வட-கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கு புதிய தனி தொகுதிகளும், பல்-அங்கத்தவர் தொகுதிகளும் உருவாக்கி தரப்படும் என்று உறுதி வழங்கப்பட்டது.

165 தொகுதிகள் என்று சொல்லும்போது அதற்குள் புதிய தனி தொகுதிகளும், பல்-அங்கத்தவர் தொகுதிகளும் வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், புதிய கணக்கின்படி 125 தொகுதிகளுக்குள் புதிய தனி மற்றும் பல்-அங்கத்தவர் தொகுதிகள் உருவாக்க இடமில்லை. எனவே புதிய யோசனையை நாம் ஏற்க மாட்டோம்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த புதிய யோசனைகளை அமைச்சரவைக்கு சமர்பித்துள்ளார். இதுபற்றி இன்று நான் அவரிடம் பேசி, எமது எதிர்ப்பை தெரிவித்தேன். தான் இந்த யோசனையை ஐதேக யோசனையாக அமைச்சரவையில் சமர்பிக்கவில்லை எனவும், ஏற்கனவே சமர்பிக்கப்பட்ட பல்வேறு யோசனைகளை சமநிலைப்படுத்தவே இந்த யோசனைகளை தான் சமர்பித்ததாகவும் அவர் எனக்கு பதில் கூறியுள்ளார்.

மேலும் இவற்றை சிறுபான்மையினர் ஏற்க மறுப்பதால் சிறுபான்மை கட்சிகளுடன் ஒரு கலந்துரையாடலை ஜனாதிபதி நடத்த வேண்டும் எனவும் தான் ஜனாதிபதிக்கு யோசனை கூறியுள்ளதாகவும் பிரதமர் என்னிடம் கூறினார். எனவே நமது கூட்டணி இன்று அல்லது நாளை ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட உள்ளது.

இதை நாம் அனுமதிக்க முடியாது. இதுபற்றி நான் இன்று ஜேவிபி தலைவர் அனுர குமார திசாநாயக்கவுடனும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமுடனும் கலந்துரையாடியுள்ளேன். வியாழக்கிழமை, நமது சிறு கட்சிகளின் பேரவையை கூட்டி, தொகுதிகள், மாவட்ட விகிதாரம், தேசிய விகிதாசாரம் பற்றிய நமது யோசனையையும், இரட்டை வாக்கு முறைமை பற்றியும் இறுதி முடிவுகளை எடுக்க தீர்மானித்துள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to அமைச்சரவை அங்கீகரித்துள்ள தேர்தல் சீர்திருத்த யோசனையை த.மு.கூ ஏற்காது: மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com