இலண்டனில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையொன்று தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்கிற முறையில் இரா.சம்பந்தன் தமிழ் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் வெளிநாட்டு விவகாரங்களுக்கு பொறுப்பானவருமான எம்.ஏ.சுமந்திரன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து இங்கிலாந்தில் இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்திவருவது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகள் மற்றும் தேர்தல் நிலைமைகள் தொடர்பிலேயே வெளிநாட்டில் கூடி பேசுவதாக தமிழரசுக் கட்சியின் வெளிநாடு விவகாரங்களுக்கு பொறுப்பாக உள்ள சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்களின் பிரச்சினை தொடர்பில் பேசுவது என்றால் வடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதேபோன்று கிழக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்களுடன் பேசுவதே சரியாக இருக்கும். ஆனால் அவர்களுக்கும் இந்த பேச்சுவார்த்தைக்கும் தொடர்பில்லை.
தேர்தல் தொடர்பாக பேசுவது என்றால் வெளிநாட்டில் போய் வெளிநாட்டவருடன் பேசவேண்டிய தேவை என்ன? தேர்தல் நடக்கபோவது இலங்கையில் அது தொடர்பில் இலங்கையில் தான் பேச வேண்டும்.
எம்மை பொறுத்தவரை தமிழ் மக்களின் உடனடி தேவைகள் மற்றும் தேர்தல் நிலைமைகள் குறித்து வெளிநாட்டில் பேசுவது என்பது ஒரு ஏமாற்று வேலை. இதற்கு முன்சிங்கப்பூரில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டமும் இரகசிய கூட்டம். அதனை தொடர்ந்து இங்கிலாந்தில் நடக்கும் இந்தக் கூட்டமும் இரகசிய கூட்டமாக உள்ளது.
சிங்கபூர் கூட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தெரிவிக்கப்படவில்லை. அந்த கூட்டம் முடிந்த பின்னரும் ஒன்றும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக இலண்டன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எவரையும் எந்த பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை.
தமிழ் மக்களின் உடனடி பிரச்சினைகள் மற்றும் தேர்தல் நிலைமைகள் என்பது பட்டவர்த்தமான விடயம் அதில் இரகசியம் காக்க எதுவுமில்லை. அடுத்தது மூன்றாவதாக துபாயில் பேசபோவதாகவும் ஊடக வாயிலாக அறிகின்றோம்.
தற்போது இந்த இரகசியகூட்டம் தொடர்பில் ஊடகங்களில் பலவாறாக செய்திகள் வெளிவர தொடங்கியுள்ளன. எனவே இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.” என்றுள்ளார்.




0 Responses to இலண்டன் பேச்சுக்களின் சூட்சுமம் என்ன?, இரா.சம்பந்தன் விளக்க வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்