Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜபக்ஷக்கள் கொலைக் கலாச்சாரத்தை வரலாறாக கொண்டவர்கள். அப்படிப்பட்டவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தவொரு தருணத்திலும் பிரதமராக முன்னிறுத்த மாட்டார் என்று பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையே இரகசிய நட்பு இருப்பதாகவும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை களமிறக்குவதற்கான முயற்சிகள் திரைமறைவில் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படும் செய்திகள் வெறும் புரளி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கினால், அவர் அப்பதவியிலிருந்து ஜனாதிபதியாவதற்கு ஒரு தோட்டாவை மாத்திரமே செலவு செய்வாரென்பதை நன்கு புரிந்து வைத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இறுதிவரை அதற்கான சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்தித்தர மாட்டார் என்றும் பிரதியமைச்சர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “கொலை கலாசாரத்தை வரலாறாக கொண்டவர்கள் ராஜபக்ஷ குடும்பத்தினர். ‘கொலை’ செய்வது அவர்களின் பரம்பரை வியாதியாகும். இதனை குணப்படுத்த முடியாது. ராஜபக்ஷ ஆட்சியின் போது இடம்பெற்ற கொலைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பிணம் தின்னும் சுறாக்களை வளர்த்துள்ளமையை தானே ஒப்புக்கொண்டுள்ளதுடன், மன ஆறுதலுக்காகவே தான் இதனை வளர்த்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் எவ்வாறான மன ஆறுதலை இவர் அடைந்தார் என்பதனை எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ராஜபக்ஷவுக்கும் அவரது மகன்களுக்கும் தம்மைவிட சிறந்த விளையாட்டு வீரர்கள் இருந்தால் பொறுத்துக் கொள்ள இயலாது. அதற்காகத்தான் 23 வயதேயான தாஜுதீன் என்னும் ரகர் விளையாட்டு வீரரை கொலை செய்து பின்னர் அதனை விபத்தாக காண்பித்தார்கள்.

உண்மையை தட்டிக் கேட்ட ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டார். பிரதீப் எஹெலியகொட கடத்தப்பட்டார், மத்தனா இஸ்மாயில் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது. இவை மறைக்கப்பட வேண்டிய விடயமல்ல. நான் சேறு பூசுவதற்காக இவற்றைக் கூறவில்லை. எந்த சந்தர்ப்பங்களிலும் இவற்றை ஆதாரங்களுடன் நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன்.

திருடனை திருடனென சொல்ல முடியாதவனும், திருடன் தான். எனக்கு கிடைக்கும் சம்பளம் மக்களின் பணம் என்ற படியால் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நான் உண்மையைக் கூற அச்சப்படமாட்டேன்.

எனக்கெதிராக 05 இற்கு மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்களும் போதைப் பொருள் கடத்தியவர்களும் தாக்கல் செய்துள்ளமைதான் மிகவும் கவலையளிக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷ என்பவர் கொலை செய்யும் திருடர். இப்போது இவர் விகாரைகளுக்குச் சென்று நான் தவறு இழைத்து விட்டேன். அதற்காக வருந்துகிறேன். எனக்கு மீண்டும் ஒரு தடவை ஆட்சி செய்ய சந்தர்ப்பம் தாருங்களென மன்றாடி வருகின்றார். பொதுமக்கள் மீண்டும் இந்த திருடர்களை நம்பி ஏமாறக்கூடாது.

ஒவ்வொன்றும் 06 கோடி ரூபா பெறுமதியான லெம்போகெனி வாகனங்களை தீர்வையின்றி இறக்குமதி செய்துள்ளார்கள். சூரிச் நாட்டிலிருந்து நாய்க் குட்டியொன்றை எடுத்து வருவதற்காக தனியான விமானமொன்றை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

ரோஹித்த ராஜபக்ஷ தனது பெண் நண்பியுடன் இரத்மலானையிலிருந்து நுவரெலியாவுக்கு விமானத்தில் சென்று தங்க குதிரையில் சவாரி செய்து வந்தமைக்கான புகைப்படங்களுடன் கூடிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. துபாய் மெரியட் ஹோட்டலில் யோஷித்தவின் பெண் நண்பிக்கு மாத்திரம் 49 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு பங்குகள் உள்ளன. இவை தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ராஜபக்ஷவின் புதல்வர்கள் கொழும்பில் தமக்கு வீடு இல்லையென கூறியுள்ளனர். ஆனால் ஷிராந்தி ராஜபக்ஷ தமக்கு 03 கோடி ரூபாவுக்கு கொழும்பில் வீடு இருப்பதாக தெரிவித்துள்ளார். இவர்களில் யாரை நம்புவதென்றே எமக்கு புரியவில்லை.

ராஜபக்ஷ குடும்பத்தில் மூத்த சகோதரரான சமல் ராஜபக்ஷவை மாத்திரமே நான் ஒரு நல்ல மனிதராக பார்க்கிறேன். ஆட்சி மாற்றத்தின் போது இறைவனின் ஆசிர்வாதம் இலங்கைக்கும் இருக்கிறது என அவர் கூறியிருந்தார்.” என்றுள்ளார்.

0 Responses to ராஜபக்ஷக்கள் கொலைக் கலாசாரத்தை வரலாறாக கொண்டவர்கள்: ரஞ்சன் ராமநாயக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com