Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தோனேசியாவின் கடந்த வாரமும் எரிமலை சீற்றத்தால் சில விமான நிலையங்கள் மூடப் பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு மேலும் இரு எரிமலைகள் தொடர்ந்து சாம்பலைக் கக்கி வருவதால் அங்கிருக்கும் 5 முக்கிய விமான நிலையங்கள் தற்போது தற்காலிகமாக மூடப் பட்டுள்ளன.

இதனால் ரமடான் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக வீடுகளுக்குச் செல்லக் காத்திருந்த பல ஆயிரக் கணக்கான இந்தோனேசியப் பயணிகள் பயணம் தடைப்பட்டுப் பரிதவித்து வருகின்றனர்.

ஜாவாத் தீவின் கிழக்கே ராவுங் உயிர் எரிமலையின் அண்மைய சீற்றத்தால் ஏற்பட்ட சாம்பலால் அத்தீவில் இருக்கும் 4 சிறிய விமான நிலையங்கள் மூடப் பட்டுள்ளன. கடந்த வாரமும் இதே எரிமலையின் சீற்றத்தால் தான் பாலியிலுள்ள டென்பசார் சர்வதேச விமான நிலையம் உட்பட முக்கிய விமான நிலையங்கள் மூடப் பட்டிருந்தன. தற்போது இந்தோனேசியாவின் வடக்கே மலுக்கு தீவில் உள்ள கமலாமா எரிமலை சீற்றத்தால் டெர்னாட்டேவிலுள்ள சுல்தான் பபுல்லா சர்வதேச விமான நிலையம் மூடப் பட்டுள்ளது. பசுபிக் சமுத்திரத்தில் ரிங் ஆஃப் ஃபைர் எனப்படும் நெருப்பு வளையப் பகுதியில் இந்தோனேசியா அமைந்திருப்பதால் அங்கு ஒரு வருடத்தில் அதிகளவு நில அதிர்வுகளோ அல்லது எரிமலை வெடிப்புக்களோ ஏற்படுவது வழமையாகும்.

இந்நிலையில் தற்போது அங்கு சீறியுள்ள எரிமலைகள் கக்கி வரும் சாம்பல் புகையானது அவற்றினூடாகப் பயணிக்கக் கூடிய விமானங்களின் எஞ்சின்களை செயலிழக்கச் செய்யும் வலிமை உடையவை என்பதால் தான் குறித்த வான் பரப்பைப் பயன் படுத்தும் விமானப் பயணங்கள் ரத்து செய்யப் பட்டு விமான நிலையங்களும் மூடப் பட்டுள்ளன. இதனால் ரமடான் நோன்பு முடித்துக் கிடைக்கும் 4 நாள் எயிட் கொண்டாட்டத்தில் பங்குபெற தமது வீடுகளுக்குத் திரும்பவிருந்த இந்தோனேசியர்களே அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர். இதைவிட கிட்டத்தட்ட ஒரு நாள் முற்றாக மூடப் பட்டிருந்த சுரபயாவிலுள்ள ஜுவான்டா சர்வதேச விமான நிலையம் இந்தோனேசிய நேரப்படி வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கே சேவைக்குத் திரும்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் இன்று காலை பசுபிக் சமுத்திரத்தில் அவுஸ்திரேலியா அருகெ உள்ள சாலமன் தீவுகளுக்கு அண்மையில் லடாவை மையம் கொண்டு 7.5 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியதாகவும் இதனால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் குழுமியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இதன்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டுத் திரும்பப் பெறப்பட்ட போதும் சேத விபரங்கள் உடனடியாக இன்னமும் வெளியாகவில்லை.

0 Responses to இந்தோனேசிய எரிமலைச் சீற்றத்தால் 5 விமான நிலையங்கள் மூடல்!: பயணிகள் தவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com