Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை அரசியல் களத்திலிருந்து தன்னை யாராலும் அகற்ற முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியலில் இருந்து தன்னை துடைத்து வீச வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறி வருகின்றார். எனினும் அதற்கான சந்தர்ப்பங்களை தான் வழங்க மாட்டேன் என்றும், மக்கள் தன்னுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அநுராதபுரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "நாம் இன்று நாட்டுக்கு உயிரூட்டும் பயணத்தை ஆரம்பித்துள்ளோம். ஜனவரி 09ஆம் திகதி இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரே நான் மெதமுலனவுக்கு சென்று விட்டேன். மக்களை நானே முதலில் சந்தித்தேன் அதற்குப் பின்னர் மக்கள் என்னைப் பார்க்க என் வீட்டுக்கு வந்தனர். இதுதான் மக்கள் என் மீது வைத்துள்ள பாசமும் மரியாதையும்.

2005 இல் நாம் அரசாங்கத்தை அமைத்தபோது பல இடங்களில் மின்சாரம் இல்லை. சீரான வீதிகள் இல்லை. உலகின் மிகப் பயங்கரமான தீவிரவாதிகளே இருந்தனர். அவர்களை ஒழித்துக் கட்டினோம். மின்சாரம் வழங்கினோம், தரமான வீதிகளை அமைத்ததுடன் வடக்குக்கு ரயில் சேவையையும் தொடங்கினோம்.

வடக்கில் தேர்தலையும் நடத்தினோம். இல்லாவிடின் ரணில் போன்றவர்களால் இவ்வாறு செயற்பட முடியுமா? ஜனவரி 8 ஆம் திகதிக்குப் பின்னரும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை என்னிடமே வைத்திருக்க முடியும். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தியாகங்களை செய்தேன். நல்லாட்சியின் மாற்றம் குறித்து அனைவரிடமும் விசாரணை நடத்தினர். பிக்குகளிடம் கூட விசாரணை தொடர்ந்தது.

1978 இன் பின்னர் ஆட்சியாளர்கள் பிரபாகரனிடம் மண்டியிட்டனர். வடக்கில் இராணுவத்தைத் தோற்கச் செய்ய நாட்டை புலிகளுக்குக் காட்டிக் கொடுத்தனர். ஆனால் தவறிக்கூட அவ்வாறு நடக்கவில்லை. மக்கள் பணத்தை நான் ஒருபோதும் கொள்ளையடிக்கவில்லை.

இந்த ராஜபக்ஷ ஒருபோதும் மதுபான சாலைகளுக்கு அனுமதி கொடுக்கவில்லை. இன்று நாடு போதைப் பொருள் நிறைந்துள்ளது. பாடசாலைகளிலும் விற்கப்படுகின்றன. யுத்தத்தை முடித்து நாம் செய்த அபிவிருத்தியை 100 நாட்களில் நிறுத்திவிட்டனர்.

வடக்கில் பெண்கள் தனியாகச் செல்ல அச்சப்படுகின்றனர். இந்நிலையில் விடுதலைப் புலிகள் இருந்தால் நல்லது எனக் கூறுகிறார்கள். இந்த நிலைமைக்கு நாட்டைக் கொண்டு வந்தவர்கள் யார்? அன்று பிரபாகரன் மஹிந்தவைக் கொல்ல வேண்டும் என்றார் அதேபோல இன்று ரணில் ராஜபக்ஷவைத் துடைத்து வீச வேண்டும் என்கிறார்.

ஆனால் இந்த மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் அப்படி செய்து விட முடியாது. நான் சிறு வயதிலிருந்தே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கிறேன். கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்தேன். தாயான கட்சியிலிருந்து பிள்ளைகள் விட்டுப் போகும்போது இந்தப் பிள்ளைதான் தாய்க்குத் துணையாக இருந்தது. நான் வேட்புமனு தொடர்பில் கதைக்கப்போவதில்லை மக்கள் அதற்குப் பதிலளிப்பர்." என்றுள்ளார்.

0 Responses to என்னை யாரும் அரசியலில் இருந்து அகற்ற முடியாது: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com