Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது 40 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்த போதும், அரச புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலினால் பிழையான விபரங்களை வெளியிட்டதாக இறுதி மோதல் காலத்தில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராகப் பணியாற்றிய வைத்தியக்கலாநிதி துரைராஜா வரதராஜா தெரிவித்துள்ளார்.

பி.பி.சி. உலக சேவையில் பிரான்செஸ் ஹரிசன் நடத்தும் ‘சாட்சியம்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

வைத்தியக்கலாநிதி துரைராஜா வரதராஜா தெரிவித்துள்ளதாவது, “இறுதி மோதல்களின் போது நான் எறிகணைத் தாக்குதலினால் கடுமையான காயமடைந்திருந்தேன். அரச ஊடக மாநாட்டில் தாம் சொல்வது போன்று செய்யாவிடின், அந்த காயத்துக்கு செய்ய வேண்டியிருந்த முக்கியமான சத்திரசிகிச்சைக்கு அனுமதி வழங்க முடியாது என்று புலனாய்வு அதிகாரிகள் என்னை அச்சுறுத்தினர்.

தாம் சொல்லிக் கொடுத்தவாறு ஊடக மாநாட்டில் பதில்களைக் கூறியதற்காக கே.எவ்.சி. உணவகத்துக்கு அழைத்துச் சென்று இராணுவப் புலனாய்வாளர்கள் விருந்து கொடுத்தனர்.

இறுதி மோதல்களின் இறுதிக் கட்டத்தில் கைது செய்யப்பட்ட நாம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நாலாம் மாடியில் தடுத்து வைக்கப் பட்டிருந்தோம். அங்கு அரச அதரவு ஊடகவியலாளர்கள் முன்பாக ஊடக மாநாட்டில் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று எமக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் வற்புறுத்தலின் பேரில், பொதுமக்களின் இழப்புகள் குறித்து தகவல்களை வெளியிட்டதாக ஊடகங்களிடம் கூறுமாறு எமக்கு உத்தரவிட்டனர்.

தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தில் இந்த ஊடக மாநாடு 2009 ஜுலை 08 ஆம் நாள் நடந்தது. போரின் இறுதிக் கட்டத்தில் வன்னியில் பணியாற்றிய ஐந்து மருத்துவர்கள் இந்த ஊடக மாநாட்டில் விடுதலைப் புலிகளின் உத்தரவின் பேரிலேயே பொதுமக்கள் இழப்புகளை அதிகரித்துக் கூறியதாக குறிப்பிட்டிருந்தனர்.

2009 ஜனவரி தொடக்கம் மே வரை 650 தொடக்கம் 750 பொதுமக்களே கொல்லப்பட்டனர் என்றும் 650 இற்கு குறைவானோரே காயமுற்றனர் என்றும் அவர்கள் கூறியிருந்தனர். போரில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தும் அதற்கு நேர்மாறான வகையில் புள்ளிவிபரங்களை கொடுத்ததையிட்டு வெட்கப்படுகிறேன். தவறு செய்து விட்டதாக உணர்கிறேன்.” என்றுள்ளார்.

0 Responses to அரச புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலினால் பிழையான தகவல்களை வெளியிட்டேன்: துரைராஜா வரதராஜா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com