Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இலங்கை பௌத்த நாடு என்கிற பெயரில் சிறுபான்மையின மக்களான தமிழ்- முஸ்லிம்களை இலக்கு வைத்து திட்டமிட்ட முறையில் இன அழிப்பும், அடக்கு முறைகளும் இடம்பெற்றன என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியடைந்திருப்பதை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. அதில், கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மங்கள சமரவீர தெரிவித்துள்ளதாவது, "வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை இலங்கை வரலாற்றில் ஒரு துன்பியல் நிகழ்வாகும். 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 48 மணித்தியாலங்களில் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதனால் அந்த மக்கள் 500 ரூபா பணத்துடன் தமது சொத்துக்களை இழந்து அகதிகளாகினர்.

வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்கள் இரண்டறக் கலந்து வாழ்ந்த சந்தர்ப்பத்தில் விடுதலைப்புலிகளினால் 1990ஆம் ஆண்டில் இவ்வாறான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டதனால், இரண்டு சமூகத்தின் மத்தியிலும் பாரிய பிளவு ஏற்பட்டது.

அதேபோல், மஹிந்த ஆட்சியில் மிகவும் மோசமான வகையில் சிறுபான்மை இன மக்களான தமிழ், முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டனர். பௌத்த நாடு என்ற பெயரில் மிகவும் கொடூரமான முறையில் சிறுபான்மை இன மக்கள் அடக்கப்பட்டு வந்தனர். திட்டமிட்ட ஓர் இன அழிப்பும் கடந்த ஆட்சியில் நடைபெற்றது. பெரும்பான்மை ஆதிக்கத்தைத் தூண்டிவிடும் வகையிலும் அவர்களது கரங்களை உயர்த்தும் வகையிலுமான செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டன. அதில் இருந்து மக்களையும் நாட்டையும் மீட்டெடுத்துள்ளோம்.

நாட்டை ஜனநாயகத்தின் பாதையில் செல்ல வழியமைத்துள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து நாட்டில் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளன. அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளாகச் செயற்படவேண்டும்.

தமிழ், முஸ்லிம் சமூகத்தைப் பலப்படுத்தி நாட்டில் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப எமது தேசிய அரசு முன்னிற்கும். எனவே, பழைய விடயங்களை மறந்து - கசப்பான சம்பவங்களைக் கடந்து ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணையவேண்டும். பிரச்சினைகளைத் தீர்க்க பல வழிமுறைகள் உள்ளன. தீர்வும் மிக அருகாமையில்தான் உள்ளது. அவற்றை வெற்றிகொள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் எம்முடன் ஒன்றிணையவேண்டும். பல்லின சமூகம் அமைதியாக வாழும் நாட்டைக் கட்டியெழுப்பி புதிய இலங்கையை உருவாக்க அனைவரினதும் ஒத்துழைப்பு வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த ஆட்சியில் திட்டமிட்ட இன அழிப்பு இடம்பெற்றது: மங்கள சமரவீர

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com