Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல்களினால் பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்பதை ஒப்புக்கொள்வதாக ஓய்வுபெற்ற நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மோதல் காலங்களில் கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் விசாரணை எல்லை, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிப்பதற்குமாக விரிவுபடுத்தப்பட்டது.

இந்த நிலையில், மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழு தங்களது விசாரணைகளை இறுதி செய்து அறிக்கையை அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தது. அந்த அறிக்கை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட மர்ஸூகு தருஸ்மன் தலைமையிலான குழுவால் தெரிவிக்கப்பட்ட '40,000 வரையிலான பொதுமக்கள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்கலாம்" என்ற வாதத்தை மறுத்துள்ள பரணகம அறிக்கை, யுத்தத்தின் இறுதி மணித்தியாலங்களில் கூட தங்களது நன்மைக்காக, தமிழீழ விடுதலைப் புலிகளே பொதுமக்களை அதிகளவில் கொன்றதாகத் தெரிவிக்கின்றது.

சிறுவர்களின் கட்டாய ஆட்சேர்ப்பு உள்ளிட்டதாக பொதுமக்கள் மீதான விடுதலைப் புலிகளின் ஒட்டுண்ணி நடவடிக்கைகளை, பிரபல்யமான அரசசார்பற்ற நிறுவனங்களும் சர்வதேச அமைப்புகளும் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவிக்கும் அவ்வறிக்கை, யுத்தத்தின் இறுதி 12 மணித்தியாலங்களில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு விடுதலைப் புலிகளே காரணமாக அமைந்தனர் எனத் தெரிவிக்கின்றது.

இதேவேளை, இராணுவத்தினரின் குண்டுத் தாக்குதல்களால் பொதுமக்களின் இறப்பு அதிகரித்ததென்பதை ஏற்றுக் கொள்ளும் அறிக்கை, அதன் காரணமாக 'கணிசமானளவு இறப்புகள்’ ஏற்பட்டன எனத் தெரிவிக்கின்றது. எனினும், பொதுமக்களை விடுவிக்காமல் அவர்களை மனிதக் கேடயங்களாகப் புலிகள் பயன்படுத்தியமையாலேயே இது ஏற்பட்டது எனவும் அது மேலும் தெரிவிக்கின்றது.

நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவில், சுரஞ்சன வித்தியாரத்ன, திருமதி மனோ இராமநாதன், டபிள்யூ.ஏ.டி இரத்நாயக்க, எச். சுமதிபால ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

0 Responses to இறுதி மோதல்களில் இராணுவத்தின் தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்: மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com