Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எமது நாட்டில் கடந்த காலத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாமலிருப்பதை அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் உறுதிப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மிகவும் முக்கியமான விடயங்களான உண்மையைக் கண்டறிதல், சட்டத்தை அமுல்படுத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குதல் மற்றும் கடந்தகால சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத சூழலை ஏற்படுத்தல் போன்றவை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கூட்டப்பட்ட சர்வகட்சிக்குழுவில் கலந்துகொண்டவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சர்வகட்சிக் குழுவில் சகல கட்சிகளும் கலந்துகொண்டமை தமக்கு நம்பிக்கை தரும் வகையில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் குறித்து பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த தலைவர்களுடன் தமிழர் தரப்பு நடத்திய பேச்சுவார்த்தைகள் மற்றும் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் வெற்றியளிக்காத நிலையிலேயே இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உதவியை தமிழர்கள் நாடவேண்டி ஏற்பட்டது.

பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவமான ஒப்பந்தங்கள் உள்நாட்டில் செய்துகொள்ளப்பட்டவை. இவற்றை நாம் வெளிநாடுகளில் செய்துகொள்ள வில்லை. எனினும் உள்நாட்டில் எமது பிரச்சினைக்கு தீர்வொன்றை வழங்க ஆட்சியிலிருந்த தலைவர்கள் தவறியதாலேயே வெளிநாட்டின் உதவியை நாடவேண்டி ஏற்பட்டது.

அதேநேரம், பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வொன்றையே நாம் எதிர்பார்க்கின்றோம். தமிழர்களுக்கு நாட்டில் சம உரிமையை வழங்கப்படவேண்டும். இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு வழங்கிய உறுதிமொழிகளை கடந்த அரசாங்கம் நிறைவேற்றத் தவறியது. இந்த விவகாரத்தை உள்நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்வதற்கு கடந்த அரசாங்கத்துக்கு நல்ல சந்தர்ப்பங்கள் காணப்பட்டன.

உள்ளக விசாரணையொன்றை நடத்தமாட்டோம் என கடந்த அரசாங்கம் அடம்பிடித்ததாலேயே சர்வதேச விசாரணைக்குச் சென்றது. இதனாலேயே 2012, 2013, 2014ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதேநேரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது, இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இதனை முழுமையாக நிறைவேற்றவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.

இத்தீர்மானம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தை சாதகமான முறையில் அணுகுகின்றமை புலனாகிறது. இதேவேளை, முழுமையான சர்வதேச விசாரணைக்கு நாட்டில் உள்ள ஒரு சாரார் எதிர்ப்புத் தெரிவிப்பர். அதேநேரம் முழுமையான உள்ளக விசாரணைக்கு பிறிதொரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவிப்பர். இவ்வாறான நிலையில் எந்தவொரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to கடந்த கால அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாமலிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com