Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களின் இறைமையை மறுப்பவர்களே உண்மையான பிரிவினைவாதிகள், இனவாதிகள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளதாவது, “நாட்டின் இறைமை பற்றி பேசுகின்றனர். இறைமை என்பது நாட்டில் உள்ள ஒரு இனக் குழுவிற்கு மாத்திரம் உரித்தானது அல்ல. எண்ணிக்கையில் கூடுதலாக இருக்கும் இனக் குழுவினர் மாத்திரமே இறைமை உள்ளவர்கள் போல் செயற்படுகின்றனர். ஏனைய குழுவினர் இதிலிருந்து தள்ளி வைக்கப்பட முடியாது. அவ்வாறு நடந்துகொள்வதாயின் நம்மை தனியான பாதையில் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும். எமது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் இதனையே கூறியிருந்தார்.

பாராளுமன்றத்தில் உள்ள ஒரு சில உறுப்பினர்கள் நாட்டின் இறைமை ஒரு இனக் குழுவினருக்கு மாத்திரம்தான் உரித்தானது என்பதுபோல செயற்படுகின்றனர். அவர்கள் அவ்வாறு நடந்துகொண்டால் எமது வழியில் நாம் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும். அப்படி நடந்து கொள்பவர்களே பிரிவினைவாதிகள். நாங்கள் அல்ல.

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானமானது இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் கொண்டுவரப்பட்டிருப்பதால் இதன் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் உரையாற்றியிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கடந்த காலங்களில் ஏற்பட்ட தோல்விகள் குறித்துக் கூறியிருந்ததுடன், தமது அரசாங்கம் முன்னெடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்திருந்தார். இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இன்று பாராளுமன்றத்தில் இரண்டு பிரதான கட்சிகளின் உறுப்பினர்களும் கூறியுள்ளனர்.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் விடயத்தில் இரண்டு பிரதான கட்சிகளும் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதை நாம் வரவேற்கின்றோம். ஜெனீவா தீர்மானமானது அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தொன்று. இதில் உள்ள விடயங்களை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆரம்பம் முதலே பரணகம ஆணைக்குழு மீது நாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. இந்தக் குழுவின் அமர்வுகளிலும் நாம் நம்பிக்கை வைக்கவில்லை. இவ்வாறு மோசமானதொரு ஆணைக்குழுவின் அறிக்கையில் கூட சனல் - 4 வீடியோ காட்சி போலியானது அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் மக்களின் இறைமையை மறுப்பவர்களே பிரிவினைவாதிகள்: எம்.ஏ.சுமந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com