Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் முன்வைத்த அறிக்கையினைவிட கடத்தல் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பாரதூரமானது என்று அரசாங்கத்தின் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வெள்ளைக்கொடி விவகாரம், சனல் 4-இன் ஆவணப்படங்கள், சார்ள்ஸ்- இசைப்பிரியா போன்றோரின் படுகொலைகள் உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி விசாரிக்கப்பட வேண்டும் என்று பரணகம அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது பாரதூரமான விடயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக பரணகம அறிக்கையிலும் குறிப்பிட்டது போன்று சில நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்படலாம். வெளிநாட்டு நீதிபதிகளோ, வெளிநாட்டு நிபுணர்களோ ஒத்துழைப்பு வழங்கலாம்.

பங்கேற்பு எனும் போது பல்வேறு விதமான பங்கு பற்றல்களைக் குறிப்பிட முடியும். மஹிந்த ராஜபக்ஷவும் கூட சர்வதேச நிபுணர்களை நியமித்துள்ளார். அவர்களே, பரணகம விசாரணையில் ஆலோசனை வழங்கினர். உண்மையில் பரணகம அறிக்கை ஐக்கிய நாடுகள் தீர்மானத்தினை விட பாரதூரமானது.

இச்சந்தர்ப்பத்தில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது மடமையென நான் கருதுகின்றேன். பரணகம அறிக்கையில் வெள்ளைக் கொடி சம்பந்தமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சனல் 4 சம்பந்தமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சார்ள்ஸ், புலித்தேவன், இசைப்பிரியா போன்றோரின் படுகொலை பற்றி கூறப்பட்டுள்ளது.

இவை உடனடியாக விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும் என்று பரணகம அறிக்கை கூறுகின்றது. ஐக்கிய நாடுகள் அறிக்கையில் இது போன்ற விடயங்கள் குறிப்பிடப்படவில்லை. இது போன்று பெயரிடப்படவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப உதவி, கண்காணிப்பு உதவி அல்லது சட்ட ரீதியான உதவி அல்லது நீதிபதிகள் என்பதே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையின் 20வது யோசனையில், மேற்குறிப்பிடப்பட்டுள்ள யோசனைகள் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் இணக்கப்பாட்டுடனேயே நடைமுறைப் படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றிலிருந்து 19 வரையான விடயங்கள் எமது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டுடனேயே நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அரசாங்கம் இணக்கம் தெரிவிக்காவிட்டால் ஐக்கிய நாடுகள் எதுவும் செய்ய முடியாது. அத்துடன் இலங்கையின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாட்டை ஏற்றுக் கொள்வதை உறுதிப்படுத்திக் கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

13வது திருத்தம் பற்றி குறிப்பிட்டுள்ள போது பொலிஸ், காணி அதிகாரம் என எதுவுமே குறிப்பிடப்படவில்லை. 13வது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகள் பலப்படுத்த உதவ வேண்டும் என்பதே குறிப்பிடப்பட்டுள்ளது. எப்படி என்பதை அரசாங்கமே தீர்மானிக்கும்.” என்றுள்ளார்.

0 Responses to ஐ.நா. அறிக்கையைவிட பரணகம அறிக்கை பாரதூரமானது: ராஜித சேனாரத்ன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com