Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் குறித்து அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்காக மாத்திரமே, சர்வதேச சட்ட நிபுணர்கள் சிலரை தன்னுடைய ஆட்சிக்காலத்தில் நாட்டிற்கு வரவழைத்ததாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவரான மக்ஸ்வெல் பரணகம, எழுத்துமூலம் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அபிப்பிராயம் தெரிவிப்பதற்கு அப்பால் வேறெந்த பொறுப்புகளும் அவர்களுக்கு இருக்கவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகப் பிரிவு நேற்று புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பான் அரசாங்கத்தின் சட்ட நிபுணர்கள் அலுவலக பிரதிநிதியான மொட்டோ நொக்கூச்சீ முன்னாள் ஜனாதிபதியை நேற்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடினார். காணாமற்போனோர் தொடர்பில் கண்டறிவதற்காக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக அழைக்கப்பட்டமை குறித்து நொக்கூச்சீ இதன்போது நன்றி தெரிவித்ததாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் அல்லது ஏனைய பிரஜைகள் தொடர்பான நீதிமன்ற அதிகாரத்தை வகிப்பதற்கும், சட்ட நிபுணர்களாக செயற்படுவதற்கும் எந்தவொரு சந்தரப்பத்திலும் வெளிநாட்டு சட்ட நிபுணர்களின் சேவையை பெற்றுக்கொள்ளவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய செயற்பாட்டிற்கு நாட்டு மக்கள் எதிரானவர்கள் என்பதுடன், வெளிநாட்டு சட்ட நிபுணர்கள் நீதிமன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பது, நாட்டின் சாதாரண சட்டத்திற்கும், அரசியலமைப்பிற்கும் முரணானது எனவும் முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 Responses to சர்வதேச சட்டங்கள் குறித்து கருத்துக்கள் அறியவே சர்வதேச சட்ட நிபுணர்கள் அழைக்கப்பட்டனர்: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com