Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் அரசியல் கைதிகள் 99 பேர் புனர்வாழ்வுக்கு இணக்கம் தெரிவித்து கடிதங்களை வழங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பெறுவதற்கு விருப்பம் தெரிவித்த தமிழ் அரசியல் கைதிகளில் முதற்கட்டமானவர்கள் எதிர்வரும் பத்து நாட்களுக்குள் புனர்வாழ்வுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக டி.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

நேற்றைய கூட்டத்தில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பிரதமரின் செயலாளர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயரதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் வெலிக்கடை மகசின் சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளிடம் தெரிவித்தனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், “மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்களில் 99 பேர் புனர்வாழ்வு பெற்றுச் செல்வதற்கு விருப்பம் தெரிவித்து கடிதம் வழங்கியுள்ளனர். இவர்களில் 14 பேர் ஏற்கனவே தண்டனை பெற்றவர்கள் என்பதால் எஞ்சிய 85 பேருடைய புனர்வாழ்வுக் கோரிக்கையை சாதகமாகப் பரிசீலிப்பதற்கு தயார் என சட்டமா அதிபர் திணைக்களம் கூறியுள்ளது.

அத்துடன் புனர்வாழ்வுக்கு அனுப்பும் செயற்பாடுகளை இன்றுமுதல் ஆரம்பித்து பத்து நாட்களுக்குள் அவர்களை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைதிகளின் விடயத்தை சட்டமா அதிபர் திணைக்களம் சாதகமாகப் பரிசீலித்துள்ளமை தொடர்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை கைதிகளிடம் நேரில் சென்று தெரிவித்துள்ளோம்.

அரசாங்கத்தின் இந்த உறுதிமொழி தொடர்பில் தமக்குள் ஆராய்ந்து முடிவை சிறைச்சாலைகள் ஆணையாளருக்குத் தெரிவிப்பதாக கைதிகள் கூறியுள்ளனர். அதேநேரம், உண்ணாவிரதமிருந்த கைதிகளின் உடல்நிலையில் சோர்வு காணப்படுகின்றபோதும் எவரும் ஆபத்தான கட்டத்தில் இல்லையென்றும் அவர்களுக்கு தான் ஏற்கனவே உத்தரவிட்டதற்கமைய சேலைன் வழங்கப்படுகின்றது.” என்றுள்ளார்.

இங்கு கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “அரசாங்கம் ஏற்கனவே வழங்கிய உறுதிமொழிக்கு அமைய இதுவரை 39 பேரை பிணையில் விடுவித்துள்ளது. கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் 62 பேரை விடுவிப்பதாக உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை 39 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நீதவான் நீதிமன்றத்தில் வழக்குள்ளவர்களுக்கு இனி பிணை வழங்க முடியாது என்றும், எஞ்சியவர்களை மேல்நீதிமன்றத்தில் வழக்குள்ளவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் புனர்வாழ்வுக்கு விருப்பம் தெரிவித்தவர்களில் முதற்கட்டமானவர்கள் இன்றுமுதல் பத்து நாட்களுக்குள் அதாவது எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவார்கள் என்ற உறுதிமொழி சட்டமாஅதிபர் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வுக்குத் தயார் என அறிவித்தும் அரசாங்கம் எதுவித பதிலும் வழங்கவில்லையென்றே கைதிகள் கூறிவந்தனர். இந்த நிலையில் அரசாங்கம் உறுதி மொழியொன்றை வழங்கியுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகள் 99 பேர் புனர்வாழ்வுக்கு இணக்கம்: டி.எம்.சுவாமிநாதன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com