Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தனது வான் பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக தெரிவித்து ரஷ்ய போர் விமானமொன்றை துருக்கி நேற்று செவ்வாய்க்கிழமை சுட்டு வீழ்த்தியுள்ளது.

சுட்டு வீழ்த்தப்பட்டது தமது போர் விமானமே என்பதை ரஷ்யாவும் உறுதி செய்துள்ளது. அத்தோடு, இந்த சம்பவத்திற்கு தனது கடும் கண்டனத்தை ரஷ்யா வெளியிட்டுள்ளது.

சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யாவின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இவற்றில் எஸ்யு-24 ரக விமானங்களும் அடங்கும். இந்த நிலையில் எஸ்யு-24 ரக ரஷ்ய விமானம் சிரியா வான் பரப்பில் எல்லைக்குள் செவ்வாய்க்கிழமை அத்துமீறியதாகத் துருக்கி இராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

துருக்கியின் ஹத்தாய் மாகாணம், யாய்லிதாக் நகருக்கு மேலே ரஷ்ய விமானம் பறந்து சென்றதாகவும், 5 நிமிட நேரத்தில் 10 முறை அந்த விமானத்துக்கு துருக்கி இராணுவம் எச்சரிக்கை விடுத்ததாகவும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கைகளை ரஷ்ய விமானிகள் பொருட்படுத்தாமல் தொடர்ந்து துருக்கி வான்வெளியில் பறந்து கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, துருக்கியின் எஃப்-16 ரகப் போர் விமானங்கள் ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தின.

ரஷ்ய விமானம் துருக்மன் மலைப் பகுதியில் மோதி விழுந்து நொறுங்கியது. விமானம் விழும் முன்னர், அதன் இரு விமானிகள் அதிலிருந்து பாரசூட் மூலம் வெளியேறி உயிர் தப்பினர். ஆனால், அவர்கள் எங்கு உள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. அவர்களை மீட்கும் நடவடிக்கையில் துருக்கி இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என அந்நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ரஷ்ய போர் விமானம் அத்துமீறியதாக, துருக்கிக்கான ரஷ்ய துணைத் தூதரிடம் துருக்கி அரசு தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தது.

இதனிடையே, துருக்கி வான் பரப்பில் தங்கள் போர் விமானம் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுவதை ரஷ்யா மறுத்திருக்கிறது. தங்களின் போர் விமானம் சிரியா எல்லைக்குள் பறந்து பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியது என்றும் ஒருபோதும் அந்த விமானம் துருக்கி வான் பரப்புக்குள் நுழையவில்லை என்றும் முதற்கட்ட விசாரணயில் தெரிய வந்துள்ளதாக ரஷிய பாதுகாப்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக, விரிவான விசாரணைக்கு ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கான துருக்கி தூதரை வரவழைத்து ரஷ்யா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தச் சென்ற போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியிருப்பது, "முதுகில் குத்தும் செயல்' என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் ரஷ்ய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியுள்ளனர். சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானம் சிரியா எல்லைப் பகுதிக்குள் விழுந்துள்ளது. துருக்கிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத நிலையில் எங்களது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. துருக்கியின் இந்தச் செயல் மிக பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும்.” என்றுள்ளார்.

0 Responses to ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது துருக்கி; பின்விளைவுகள் மோசமாகும் என புடின் எச்சரிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com