Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாரீஸ் பயங்கரத்தைக் குறிப்பிடும்போது, அநேகமாக எல்லா ஊடகங்களுமே, SOFT TARGET என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகின்றன.

ஒற்றைக்கையால் நூறு பேரை அடித்துத் துவைக்கிற தமிழ்த் திரைப்படக் கதாநாயகனை வழிக்குக் கொண்டுவர, அவனது குழந்தையைக் கடத்துகிற வில்லனை எத்தனையோ படங்களில் பார்த்திருக்கிற நமக்கு SOFT TARGET என்கிற வார்த்தை புதிதல்ல! அதுதான் இது!

பிரான்ஸ் படுகொலைகளைத் தொடர்ந்து, வில்லன் யார், கதாநாயகன் யார் என்றெல்லாம் அக்பர் ரோடு அகதிகள் முதல் ஆசம்கான்கள் வரை ஆளாளுக்குப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

என்றாலும், தமிழகத்திலிருந்து ஒலிக்கிற ஒரு குரல், மானுடத்தை நேசிக்கிற தமிழர்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது.

அது, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவின் குரல்.

"பாரீஸில் நடந்திருப்பது காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதல்.

எந்த வகையிலும் அதை நியாயப்படுத்த முடியாது. அப்பாவி மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஐ.எஸ்.இயக்கம் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அப்பாவி ஒருவனைக் கொல்வது ஒட்டுமொத்த சமுதாயத்தையும் கொல்வதற்குச் சமமானது என்கிற திருக்குர்ஆன் வாசகத்தை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்கிறார் ஜவாஹிருல்லா.

இங்கிருந்து 26வது மைலில் அப்பாவித் தமிழ்மக்களை சிங்கள இராணுவம் விரட்டி விரட்டிக் கொன்றபோது, அந்தக் காட்டுமிராண்டித்தனத்தை உண்மையாகவும் வன்மையாகவும் கண்டித்தவர்கள் மனித நேயக் கட்சியினரும் முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினரும்!

ஈழத்தில், சிங்கள இராணுவத்தின் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரையானவர்களில் பெரும்பாலானவர்கள் ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள். வாய்கிழியப் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிற ராம,கோபாலன்களும் ஹெச்.ராஜாக்களும் அந்த மக்களுக்காகப் பேச மறுத்தபோது,

எம் உறவுகளுக்காகக் குரல்கொடுத்தவர்கள் ஜவாஹிருல்லாக்களும் தமீமுன் அன்சாரிகளும்! அந்த அடிப்படையில், எந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்தும் கருத்து சொல்வதற்கான சகல தகுதியும் இருக்கிறது, பேராசிரியர் ஜவாஹிருல்லாவுக்கு!

தன் நாட்டின் அப்பாவிக் குடிமக்களையே விமானத்திலிருந்து குண்டுவீசிக் கொன்று குவித்த இலங்கைக்கும், அப்படிக் கொல்ல சகல சௌகரியங்களையும் செய்துகொடுத்து இழிவான வரலாற்றைப் படைத்த இந்தியாவுக்கும் பாரீஸ் சம்பவம் குறித்துக் கருத்து சொல்வதற்கான தகுதி .000000001 சதவிகிதம் கூட கிடையாது.

மருத்துவ மனைகள் மீது குண்டுவீசி நோயாளிகளையும், பள்ளிக்கூடங்களைத் தாக்கி மழலைகளையும், தேவாலயங்கள்-கோயில்களைத் தாக்கி பக்தர்களையும் கொன்று குவித்த காட்டுமிராண்டிகள் இவர்கள்.

அந்தக் கொடூரமான தாக்குதலிலிருந்து எமது குழந்தைச் செல்வங்களைக் காப்பாற்ற, ஒவ்வொரு பள்ளிக்கூடத்தின் அருகிலும் பதுங்கு குழிகளை அமைத்த வீரர்கள், தமிழர் தாயகத்தின் மாவீரர்கள்.

அந்த இனப்படுகொலைக்கு உத்தரவிட்ட கையோடு, தமது பாதுகாப்புக்காக கொழும்பு நகரின் நட்ட நடுவில் சொகுசுப் பதுங்குகுழி அமைத்துக் கொண்டிருந்த கோழைகள், கோத்தபாயவும் மகிந்த ராஜபக்சவும்! அந்தக் கோழைகளைத்தான் நடுவீட்டில் வைத்துக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது எமது இந்தியா.

பாரீஸ் சம்பவம் பற்றி வாயைத் திறக்க தகுதியே இல்லாத இலங்கை, சாவுவீடு என்கிற லஜ்ஜை கூட இல்லாமல், 'பந்தலிலே பாகற்காய், தொங்குதடி பார்த்துக்கோ' என்கிற சுயநல ஒப்பாரியை உடனடியாகத் தொடங்கிவிட்டது.

ஒன்றரை லட்சம் தமிழரின் ரத்தம் வாயோரம் வழிந்துகொண்டேயிருக்க, அதைப் பற்றிக் கவலையேபடாமல், உலகுக்கே போதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் அந்த பௌத்தப் பொறுக்கிகள். பாரீஸ் பயங்கரத்தைக் காட்டிலும் பயங்கரமானது இவர்களது போதனை.

தலைகீழாகக் குத்துக்கரணம் அடிப்பது, பௌத்த சிங்கள அரசியல்வாதிகளுக்குக் கைவந்த கலை. (கூட்டமைப்பே அவர்களிடமிருந்துதான் கற்றுக் கொண்டிருக்கிறது இதை!) அதிலும் பழம் தின்று கொட்டை போட்டவர், மகிந்த ராஜபக்ச அரசிலும் அமைச்சராக இருந்து, ரணில் - மைத்திரி அரசிலும் அமைச்சராக இருக்கிற நிமால் சிறிபால டி'சில்வா என்கிற மகானுபாவர்.

இந்த சில்வா தான், பாரீஸ் சம்பவத்தை அடுத்து ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் வகுப்பெடுக்கத் தொடங்கியிருக்கிறார்.

'பயங்கரவாதத்தைத் தடுக்க முடியாமல் தடுமாறி வருகிற பிரான்ஸ் - அமெரிக்கா - பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்துவிட்ட இலங்கையிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இப்படியொரு சாதனையைச் செய்த இலங்கை அரசுக்கு, அந்த நாடுகள் மாலையிட்டு மண்டியிட்டு மரியாதை செலுத்தவேண்டும்' என்கிற சில்வாவின் போதனை, சர்வதேசத்துக்கும் சர்வ நிச்சயமாக எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும்.

போகிற போக்கில் உலக நாடுகளின் முகத்தில் ஓங்கி மிதித்திருக்கிறார் சில்வா. உளறுவதென்று முடிவு செய்துவிட்ட பிறகு, அதற்கு வரையறை ஏதாவது இருக்கிறதா என்ன?

கொஞ்சம்விட்டால், இந்த விஷயத்தில் ஸ்ரீமான் சுவாமியையே மிஞ்சிவிடுவார் போலிருக்கிறது சில்வா! விடுதலைப் புலிகளுடனான மோதலின்போது,

சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படக் கூடாது என்று இலங்கைக்குப் போதித்தவர்கள் தான், இப்போது பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் - என்பது உளறுவாயர் சில்வாவின் மேலான கருத்து.

இலங்கையில் நல்லாட்சியா நடத்தச் சொல்கிறீர்கள்? நல்லிணக்கத்தையா வலியுறுத்துகிறீர்கள்? வெளிநாட்டு நீதிபதியை வைத்தா விசாரிக்கச் சொல்கிறீர்கள்? - இவ்வளவு கேள்வியும் இருக்கிறது சில்வாவின் அறிக்கையில்!

வைகோ - ஜவாஹிருல்லா முதல், ஈழத் தமிழர் மக்களவை - நாடு கடந்த தமிழீழ அரசு வரை, ஒட்டுமொத்த உலகத் தமிழினமும் ஒருமித்த குரலில் பாரீஸ் சம்பவத்தைக் கண்டிக்கிறோம்.

சொந்த அரசியலைத் திணிக்காமல், பிரெஞ்சு மக்களின் துயரிலும் கண்ணீரிலும் எந்த உள்நோக்கமும் இல்லாமல் பங்கேற்கிறோம். இலங்கையோ, இப்படியொரு துயரச் சூழலிலும், தன்னுடைய அருவருப்பு அரசியல் மூலம் தான் யார் என்பதை அம்பலப்படுத்துகிறது.

மகிந்த ராஜபக்சவின் ஊதுகுழலான சில்வா மட்டுமில்லை, பௌத்த சிங்கள ஊதுகுழல்கள் அனைத்தும், பாரீஸ் சம்பவத்தைப் பயன்படுத்தி, இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையைக் குழிதோண்டிப் புதைக்க முயலுகின்றன.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் என்ன நடந்தது என்பதையெல்லாம் தோண்டித் துருவிப் பார்க்கக் கூடாது என்பது அவர்களது வாதம். அப்படிப் பார்த்தால் எப்படி பயங்கரவாதத்தை முறியடிக்க முடியும் - என்பது அவர்களது கேள்வி.

மைத்திரி - ரணிலின் பின்னணி இல்லாமலா இதெல்லாம் நடக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

எதை பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல் என்கிறார்கள் இவர்கள்? பாரீஸ் தாக்குதல் எவ்வளவு கோழைத்தனமானதோ, எவ்வளவு கொடுமையானதோ,

'அதே அளவுக்குக் கொடுமையானது - கோழைத்தனமானது - வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை 4 லட்சம் அப்பாவித் தமிழ் உறவுகள் மீது இலங்கை இராணுவம் நடத்திய கொலைவெறித் தாக்குதல். அதுதான் அப்பட்டமான பயங்கரவாதம்.

எமது ஈழ உறவுகளின் நியாயமான நேர்மையான மனிதாபிமான மனநிலையை முழுமையாக அறிந்தவன் என்கிற உரிமையுடன்தான் 'அதே அளவுக்கு' என்று குறிப்பிடுகிறேனே தவிர, அது எனது சொந்த வார்த்தையல்ல!

பாரீஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கைக்கும், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எம் உறவுகளின் எண்ணிக்கைக்கும் சம்பந்தமேயில்லை. இதைப் போல பல நூறு மடங்கிருக்கும் அது!

ஆனால், இரண்டிலுமே, கொல்லப்பட்டவர்கள் - அப்பாவிகள்..... நிராயுதபாணிகள்......! எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு படுகொலைகளும் திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டன.

பாரீஸ் படுகொலைகள் பயங்கரவாதிகளால் செய்யப்பட்டன என்பதும், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் ஓர் அரசாலேயே செய்யப்பட்டன என்பதும்தான் வித்தியாசமேயன்றி,

வேறென்ன வித்தியாசம் இருக்கிறது? ஐ.எஸ்.பயங்கரவாதமும், சிங்கள அரசு பயங்கரவாதமும் வேறு வேறா என்ன!

பாரீஸ் பயங்கரத்தைத் திரித்துக் கூறி, போர்க்குற்றத்துக்கான தண்டனையிலிருந்து தப்பிக்க இலங்கை முயல்வது இயல்பானது. எந்த இண்டுஇடுக்கையாவது பயன்படுத்தித் தப்பிக்க நினைப்பது குற்றவாளிகளின் சுபாவம்.

நம்மைப் பொறுத்த வரை, கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் உறவுகளுக்கு நீதி கிடைக்க எது தடையாக இருந்தாலும் அதைத் தகர்த்தாக வேண்டும்.

ஐ.நா.போன்ற சர்வதேச அமைப்புகளில் இடம்பெறாத தனித்த அமைப்புகளின் பயங்கரவாதத்தைக் காட்டிலும், சர்வதேச அமைப்புகளில் இருக்கும் ஓர் அரசின் பயங்கரவாதம் கடுமையானது.

சர்வதேச அமைப்புகளில் இடம்பெற்றிருக்கிற ஓர் அரசின் பயங்கரவாதத்தையே தடுத்து நிறுத்த முடியாத சர்வதேசம் -

இனப்படுகொலையையே செய்துமுடித்த அதன் பயங்கரவாதத்துக்கு நியாயம் பெற்றுத்தரக் கூட முடியாத சர்வதேசம்-

தன்னுடைய கட்டமைப்புக்குள் இல்லாத ஒரு அமைப்பை மட்டும் எப்படிக் கட்டுப்படுத்திவிட முடியும்?

இந்தக் கேள்வியை எழுப்புகிற தார்மீக உரிமை இன்றைய தேதியில் தமிழினத்துக்கு மட்டுமே இருக்கிறது.

1948ல் இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து, தமிழினம் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது, தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது. தமிழ்ச் சகோதரிகள் சீரழிக்கப்படுவது காலம் காலமாகத் தொடர்கிற கொடுமை.

இதற்கு நியாயம் கேட்கிற கடமை நம்மைத் தவிர வேறெவருக்கு இருக்கிறது?

சர்வதேசத்திடம் கேட்க நிறைய கேள்விகள் இருக்கின்றன, எமது உறவுகளிடம். 1956, 1958, 1959, 1973 மற்றும் 1983ம் ஆண்டுகளில் பௌத்த சிங்கள அரசுகளின் ஆதரவுடன் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலைகளைக் கண்டித்த நாடுகள் எத்தனை?

சொந்த மக்களையே கொல்கிறாயே - என்று இலங்கையிடம் கேட்ட நாடுகள் எத்தனை? 1983ல் இலங்கையில் தமிழர்கள் மீது நடந்தது இனப்படுகொலை - என்று இந்திராகாந்தியைப் போல் துணிவுடன் சொல்ல அருகிலேயே இருக்கிற பாகிஸ்தானால் முடிந்ததா?

வெள்ளைத் தோலுக்காக மட்டுமே கண்ணீர் சிந்துகிற நாடுகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையால் தானே, திட்டமிட்டு ஒரு இனப்படுகொலையைச் செய்து முடித்துவிட்டு, அதற்கான விசாரணையிலிருந்து தப்பித்துவிடவும் முயல்கிறது இலங்கை.

அதற்காக பாரீஸ் பயங்கரத்தைக் கூட பயன்படுத்த முயல்கிற அந்த இழிபிறவியை, இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிற எந்த நாட்டையும்,

அது அமெரிக்காவாகவே இருந்தாலும், சீனாவாகவே இருந்தாலும், இந்தியாவாகவே இருந்தாலும், பாகிஸ்தானாகவே இருந்தாலும் நாம் மன்னிக்கக் கூடாது.

பாரீஸில் கொல்லப்பட்ட 200 பேருக்காக உலகே பேசலாம். ஈழத்தில் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் பேருக்காகப் பேசுகிற முதல் குரல் நமது குரலாகத்தான் இருக்க வேண்டும். நீதி கேட்கிற நமது குரல்தான், உலகின் கவனத்தைத் திருப்ப வேண்டும்.

தீவிரவாதமும் பயங்கரவாதமும் ஒன்றல்ல - என்பதை பாரீஸ் பயங்கரம் உலக நாடுகளுக்கு நிச்சயம் உணர்த்தியிருக்கும். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் எப்படி SOFT TARGET எதையும் நிர்ணயித்துக் கொள்ளவில்லையோ,

அதே மாதிரிதான் விடுதலைப் புலிகளும்! SOFT TARGET என்கிற பேச்சுக்கே அந்த விடுதலைப் போராட்ட இயக்கத்தின் வரலாற்றில் இடமில்லை.

இந்த உண்மையை உலகம் புரிந்து கொள்ளும் என்கிற பயத்தால்தான் பிளேட்டைத் திருப்பிப் போடப் பார்க்கிறது இலங்கை. அதன் குரல்தான், சில்வாவின் குரல்! அந்த சுயநலக் குரலை அம்பலப்படுத்துவதில் நாம் பின்வாங்கக் கூடாது.

சொந்தத் தாய்மண்ணின் விடுதலைக்காகப் போராடிய எந்த நாட்டிலும், மிதவாதிகளும் தீவிரவாதிகளும் முற்றிலும் முரண்பட்ட போராட்ட முறைகளைத்தான் கையாண்டிருப்பார்கள்.

காந்தியின் பாதையும் நேதாஜியின் பாதையும் ஒரே மாதிரியாகவா இருந்தது? இரண்டும் வேறு வேறாக இருந்தாலும், இருவரின் இலக்கும் விடுதலையைத் தவிர வேறெது?

உலக நாடுகளுக்கு இதைக் குறித்து வகுப்பெடுப்பது நமது வேலையில்லை என்றாலும், இதை உணர்த்தியாக வேண்டிய நிலையில் இருக்கிறோம் நாம்.

பாரீஸ் பயங்கரத்தைக் கேடயமாகப் பயன்படுத்தி, போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்பிக்க முயல்வதுடன் நின்றுவிடவில்லை இலங்கை. அதைப் பயன்படுத்தி இலங்கையிலிருக்கும் முஸ்லிம் சகோதரர்கள் மீது துவேஷத்தை ஏற்படுத்தவும் முயல்கிறது.

இலங்கையில் முஸ்லிம் சமூகத்தைக் கருவறுப்பதில் முழுமூச்சாக இறங்கியிருக்கும் பொதுபல சேனா, 'ஐ.எஸ்.அமைப்பின் அடுத்த இலக்காக இலங்கை இருக்கக்கூடும்' - என்கிற விபரீதமான ஜோசியத்தைக் கடைவிரிக்கப் பார்க்கிறது.

இதைச் சொல்லியிருப்பவர், அதன் தலைமை காமெடியனான கலகொட அத்த ஞானசார தேரர். கோத்தபாய ராஜபக்சவின் ஆசியில்லாமல் தேரரின் வாயிலிருந்து ஒரு வார்த்தை வராது.

ஜவாஹிருல்லா போன்ற நேர்மையான தலைவர்கள், தேரரின் தேர வாதத் தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும். தமிழ்த் தலைவர்களும் அதற்குத் துணை நிற்க வேண்டும்.

நம்மைப் பொறுத்த வரை, அழிக்கப்பட்ட நம் இனத்துக்கான நீதியும், சீரழிக்கப்பட்ட சகோதரிகளுக்கான நீதியும் ஒன்றிலிருந்து ஒன்று பிரித்துப் பார்க்க இயலாதவை. பாரீஸ் பயங்கரத்தையோ, வேறெந்த நிகழ்வையோ, தான் தப்பிப்பதற்கான குறுக்கு வழியாகப் பயன்படுத்த இலங்கையை நாம் அனுமதித்துவிடக் கூடாது.

மனித உரிமை ஆணையம், பௌத்த சிங்கள நச்சுப் பெருச்சாளியைப் பிடிக்க வைத்திருக்கிற பொறி, இண்டு இடுக்குகள் இருக்கிற பொறி தான். அந்தப் பொறியை மேலும் வலுப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொண்டாக வேண்டும்.

இன்றைய நமது இலக்கு, நீதி....
நீதி மட்டும்தான்!
நமது நிரந்தர இலக்கு, ஈழம்....
ஈழம் மட்டும்தான்!

1948லிருந்து எம் இனம் சிந்திக் கொண்டேயிருந்த ரத்தத்தால் தான் எழுதப்பட்டது 'ஈழம்' என்கிற எம் தேசத்தின் பெயர். ரத்தம் சிந்தச் சிந்தத்தான் அந்தக் கோரிக்கை வலுவடைந்தது. ஒரு யுத்தம் மட்டுமே அதற்கு முடிவு கட்டிவிடுமென்று நினைக்கிறீர்களா நீங்கள்?

புகழேந்தி தங்கராஜ்
mythrn@yahoo.com

0 Responses to இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது ஈழம் என்கிற தேசத்தின் பெயர் - புகழேந்தி தங்கராஜ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com