Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினரை புனர்வாழ்வு திட்டத்தினூடு விடுவிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 17ஆம் திகதி தமது உண்ணாவிரதத்தை தற்காலிகமாக இடைநிறுத்திய போது, எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னதாக முதலாவது குழு புனர்வாழ்விற்காக அனுப்பப்படும் என்ற உத்தரவாதத்தை அரசாங்கம் அளித்திருந்தது.

கடந்த 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் வைத்து பிரதமரின் அலுவலகத்தினால் இந்த முதலாவது குழுவில் இடம்பெறுகின்ற இருபது பேர் கொண்ட பெயர்ப் பட்டியல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டு, கைதிகளின் சட்டத்தரணிகளுக்கு அந்த தகவலை கொடுக்குமாறும் வேண்டிக்கொள்ளப்பட்டேன். அதனடிப்படையில் கைதிகளின் சட்டதரணிகளுக்கு அந்த தகவலை பரிமாறியிருந்தேன்.

அந்த பட்டியலோடு கொடுக்கப்பட்டிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நிபந்தனைகள் ஏற்ப்புடையதல்ல என்பதை எதிர்க்கட்சியின் சார்பில் வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதத்ததை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது நான் பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தேன்.

அதனை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்னோடு இது குறித்து பேசிய போது, இந்த நிபந்தனைகள் ஏற்ப்புடையதல்ல என்பதை எடுத்துரைத்தேன். அதனை தொடர்ந்து சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சரருக்கும் இந்த விடயம் தொடர்பில் எனது நிலைப்பாட்டை கூறியிருந்தேன்.

இந்த பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளவர்களில் ஒரு சிலர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள். இன்னும் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளவர்கள், ஆகவே அப்படியானவர்கள் மீதுள்ள ஒவ்வொரு வழக்குகளிலும் இந்த நடைமுறை செயற்ப்படுத்தப்படாதவிடத்து அவர்கள் புனர்வாழ்விற்காக வெளியிலே வருவது சாத்தியமற்ற ஒரு விடயமாகும்.

இந்தப் பட்டியலில் மூவர் மாத்திரமே ஒரு வழக்கை உடையவர்கள். அதனடிப்படையில் 85 பேரில் ஆரம்ப கட்டமாக மூவர் மாத்திரம் புனர்வாழ்விற்காக விடுவிக்கப்படுவதனையும், இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்றுள்ளார்.

0 Responses to அரசியல் கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ஏற்க முடியாது: சுமந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com