Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூட்டு எதிர்க்கட்சியாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களாக அங்கீகரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைய 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் கேள்வி எழுப்பவும், கட்சித் தலைவர் கூட்டம் அடங்கலான முக்கிய குழுக் கூட்டங்களில் பங்கெடுக்கவும் இவர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதால் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யும் தங்களது எதிர்ப்பு போராட்டத்தை கைவிட முடிவு செய்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக இடதுசாரி கட்சியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களை சுயாதீனக் குழுவாக அங்கீகரிப்பது தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற அவசர சந்திப்பிலேயே இது தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. எனினும், கூட்டு எதிர்க்கட்சியை சுயாதீனக் குழுவாக அங்கீகரிக்கும் கோரிக்கைக்கு இதன்போது அனுமதி வழங்கப்படவில்லை என்றும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.

ஏனைய அனைத்துக் கோரிக்கைகளுக்கும் பிரதமர் இணக்கம் தெரிவித்திருப்பதால், தங்களது தொடர்போராட்டத்தை கைவிட முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த இணக்கப்பாட்டின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களான தினேஷ் குணவர்த்தன (மக்கள் ஐக்கிய முன்னணி தலைவர்), விமல் வீரவன்ச (தேசிய சுதந்திர முன்னணி தலைவர்), வாசுதேவ நாணயக்கார (ஜனநாயக இடதுசாரி தலைவர்), உதய கம்மன்பில (பிவித்துரு ஹெல உறுமய தலைவர்), சந்திரசிறி கஜதீர (சமசமாஜக் கட்சி) ஆகியோருக்கு பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் அங்கீகாரம் வழங்கப்படவிருக்கின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் 52 பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை சுயாதீனக் குழுவாக பாராளுமன்றத்தில் அங்கீகரிக்க வேண்டும் என இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் ஒவ்வொரு பாராளுமன்ற அமர்விலும் குரல்கொடுத்து வந்தனர். அது மாத்திரமன்றி பாராளுமன்ற அமர்வுகளுக்கும் இடையூறு விளைவித்து வந்தனர். கடந்த வாரம் சபை நடுவில் ஒன்றுதிரண்டு சபை நடவடிக்கைகளை குழப்பியிருந்தனர்.

இவர்களின் கோரிக்கை தொடர்பில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தீர்ப்பு வழங்கியிருந்த போதும் அதனை ஏற்காமல் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையிலேயே ஜனாதிபதியுடன் இதுவிடயம் பற்றி பேச்சுநடத்தி இந்த வாரம் தீர்வொன்றை வழங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு உறுதியளித்திருந்தார். இதன்படி நேற்றுமுன்தினம் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.

0 Responses to கூட்டு எதிர்க்கட்சி (மஹிந்த அணி) தலைவர்களுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com