Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 11 தமிழ் அரசியல் கைதிகளில் ஐவர் தொடர்பில் எதிர்வரும் 11ஆம் திகதி (நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை) இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

காணாமற்போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

டி.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளதாவது, “உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 11 பேரில் 5 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. ஒருவர் கடந்த மாதம் 10ஆம் திகதி விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில், எஞ்சிய ஐவர் தொடர்பில் எதிர்வரும் 11ஆம் திகதி முடிவு எடுக்கப்படும்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட விசேட உயர் நீதிமன்றம் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த வழக்குகளை விசாரித்து வருகின்றது. இன்னமும் 20 கோப்புக்கள் மாத்திரமே சட்டமா அதிபர் திணைக்களத்தில் எஞ்சியிருக்கின்றன.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள 158 பேரில் 103 பேருக்கு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதுடன், 14 பேருக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 32 பேர் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதுடன், 9 பேர் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு மேன்முறையீடு செய்திருக்கின்றனர்.

கலந்துரையாடல்களில் ஏற்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய முதற்கட்டமாக 31 சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதுடன், இரண்டாம் கட்டமாக 8 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதேநேரம், சிலருக்கு புனர்வாழ்வளிப்பதற்கு அரசாங்கம் இணங்கியிருந்தபோதும், சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் புனர்வாழ்வுக்குத் தயாராக இல்லையெனக் கூறிவருகின்றனர்.” என்றார்.

அமைச்சரின் உரையின் பின்னர் குறுக்கிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கம் பொறுப்பேற்குமா?, எனக் கேள்வியெழுப்பினார்.

அவர்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது எனக் கூறிய அமைச்சர், அதற்கு அரசாங்கம் பொறுப்பேற்பதாகத் தெரிவித்துள்ளார். எனினும், அவர்களின் விடுதலை தொடர்பில் தன்னால் எதுவித முடிவும் எடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டள்ளார்.

இதேவேளை, காணாமற்போனவர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும் துன்பங்கள் பிரச்சினைகளை உணர்ந்து அவர்களுக்கான தீர்வொன்றினை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், காணாமற்போனவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சட்டப் பிரச்சினைகளை நீக்கும் முகமாக சட்டவலுவுள்ள சான்றுப் பத்திரமொன்றை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புத் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாகவே விஸ்தரிக்கப்படவுள்ளது. பொது மக்களின் காணிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நாளை மறுதினம் இறுதி முடிவு: டி.எம்.சுவாமிநாதன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com