Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களுக்கு அனைத்து அதிகாரங்களும் கிடைக்கும் வகையிலான தீர்வொன்றுக்கு அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, புதிய அரசாங்கம் பதவியேற்றபோது சர்வதேச நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவது மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை இணங்கிக்கொண்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் என்னும் இரா.சம்பந்தன் கோரியுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப்புக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “புதிய அரசமைப்பு உருவாக்கத்தில், சகல அதிகாரங்களுடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வைத் தமிழ் மக்களுக்கு வழங்குவதனை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும். அத்துடன், புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவை தொடர்ந்து வழங்கும்.

தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை வழங்குவதில் சிங்கள மக்கள் தடையாகவில்லை. எனவே, ஆட்சியாளர்கள் அதற்கமைய செயற்படவேண்டும். மேலும், இலங்கை அரசினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும்.

தமிழ் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டு மக்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். அதற்கு ஜனாதிபதி உறுதி வழங்கியுள்ளார். அத்துடன், சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். தண்டனை வழங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழர்களுக்கான அதிகாரம்; இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com