Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருச்சி சிறப்பு முகாமில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர் இலங்கைத் தமிழ் அகதிகள். தேர்தல் நெருக்கத்தில் இதை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என கவலையில் ஆழ்ந்திருக்கிறது மாவட்ட நிர்வாகம்.

இதுபற்றி நம்மிடம் பேசிய தடுப்பு முகாம் சிறைவாசி ஒருவர்,

இருபது வருஷமாக அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கோம். கிடைக்கற வேலையைப் பார்த்துட்டு குடும்பத்தைக் கவனிச்சிட்டு இருந்தோம்.

திடீரென சதித்திட்டம் தீட்டினோம்னு கைது பண்ணி சிறப்பு முகாம்ல அடைச்சிட்டாங்க. எங்கள்ல பல பேர் ஒன்பது வருஷமாக உள்ள இருக்காங்க. எந்த வசதியும் கிடையாது.

குடும்பத்தைப் பார்க்க அனுமதியும் கிடையாது. வழக்கு விசாரணை நடக்குது. ஆனா, குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் பண்ணலை. எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் இல்லை.

எங்களை விட்டுட்டு குடும்பம் ரொம்ப கஷ்டப்படுது. இதுபத்தி முதலமைச்சர், உள்துறை செயலாளர் வரைக்கும் மனு போட்டு பார்த்துட்டோம். யாரும் பதில் தர்றதில்லை.

ஒன்னு, எங்களைக் குடும்பத்தோட வாழவிடுங்க. இல்லைன்னா, அவங்களையும் எங்களோட சேர்த்து அடைச்சு வைங்க.

இது எது நடக்கலைன்னாலும் சாகற வரைக்கும் உண்ணாவிரதம் இருப்போம். இதுல எந்த மாற்றமும் இல்லை என்றார் வேதனையோடு.

நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முகாம் சிறைவாசிகள் தொடங்கியுள்ளனர்.

15 பேர் வரையில் பங்கேற்றுள்ள இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறது.

கைதிகள் பிடிவாதமாக இருப்பதால் அவர்களை வழிக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டம் பற்றி நம்மிடம் பேசிய சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநர் வழக்கறிஞர் புகழேந்தி,

கியூ பிரிவு போலீஸாருக்கு தற்போது எந்த வேலையும் இல்லை. வெறுமனே அரசிடம் இருந்து சம்பளம் வாங்குவது என்றைக்காவது விசாரணைக்கு வரும் என்பதால்தான் பொய் வழக்கு போடுகிறார்கள்.

கடந்த மூன்று மாதங்களில் ஒரே ஒரு வழக்கைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அதுவும் எப்படியென்றால், திருச்சி பஸ் நிலையத்தில் ஆறு பேர் உட்கார்ந்து கொண்டு, நியூஸிலாந்து தப்பிச் செல்ல திட்டமிட்டதாகவும், அங்கு வந்த கியூ போலீஸார் கைது செய்ததாகவும் புகாரைப் பதிவு செய்துள்ளனர்.

பிடிபட்ட ஆறு இலங்கைத் தமிழர்களிடமும் பாஸ்போர்ட் இல்லை. அவர்கள் எப்படி நியூஸிலாந்து தப்பிச் செல்ல முடியும்?

நல்லா இருந்து ஊருக்குள் கியூ பிரிவில் பணியாற்றும் நான்கு போலீஸார் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியவில்லை.

2009-ம் ஆண்டு வரையில் விடுதலைப் புலிகளைக் கணக்குக் காட்டி கைது செய்தார்கள்.

அதன்பிறகு,அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்தார்கள் என பொய் வழக்கு போட்டார்கள்.

அவுஸ்திரேலியா அகதிகளுக்கு இடமில்லை என்று சொன்னதால், தீவிரமாக யோசித்து நியூஸிலாந்து என சொல்ல ஆரம்பித்திருக்கிறது கியூ பிரிவு.

இந்தக் கைப்புள்ளைகளால இன்னும் எத்தனை தலை உருளப் போகுதோ தெரியலை" என்றார் காமெடி கலந்த வருத்தத்தோடு.

இந்தமுறை அரசைப் பணிய வைக்காமல் ஓயப் போவதில்லை என உண்ணாவிரதத்தில் தெளிவாக இருக்கிறார்கள் அகதிகள். முடிவு அரசின் கையில்...!.

0 Responses to நாலு போலீஸும் நல்லா இருந்த முகாமும்....'‍ வழக்குக்காக வேட்டையாடப்படும் அகதிகள்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com