Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இராணுவ முகாமுக்குள் பலவந்தமாக நுழைந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், சட்டவிரோதமாக நடந்துகொண்டமை அல்லது பலவந்தமாக நடந்துகொண்டமை தொடர்பில் விசாரணை நடத்துவதாயின் அதை இராணுவத்திடமே நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பரவிபாய்ஞ்சான் பகுதியில் சுமார் 25 ஏக்கர் தனியார் காணிகள் எந்தவித சட்ட அனுமதியும் பெறப்படாமல், பலவந்தமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரவிபாய்ஞ்சான் இராணுவ முகாமுக்குள் எதிர்க்கட்சித் தலைவர் பலவந்தமாக நுழைந்தார் என முன்னெடுக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமளிக்கும் நோக்கில் இந்த ஊடகவியலாளர் மாநாடு கூட்டப்பட்டிருந்தது.

கிளிநொச்சி பரவிபாய்ஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள காணி விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து முறையிட்டுள்ளார். இது தொடர்பில் இராணுவத்தினரிடமிருந்து அறிக்கை கோருவதாக அவர் உறுதிமொழி வழங்கியதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கடந்த 16ஆம் திகதி கிளிநொச்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சென்றிருந்தபோது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அலுவலகத்தில் மக்களைச் சந்தித்தார். அங்கு வந்திருந்த மக்கள் குறித்த அலுவலகத்துக்கு எதிராக உள்ள தமது சொந்தக் காணிகளை இராணுவத்தினர் பிடித்து வைத்துள்ளதாகவும் இதனால் மீள்குடியமர முடியவில்லை எனத்தெரிவித்து நேரடியாக வந்து இதனை பார்வையிடுமாறு அழைத்தனர்.

இந்த அழைப்பை ஏற்று எதிர்க்கட்சித் தலைவர் அங்கு சென்றபோது காவலரணில் இருந்த இராணுவ வீரர் வீதித் தடையை நீக்கி எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் வழிவிட்டார். இதற்கமைய எதிர்க்கட்சித் தலைவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர்களுடன் சென்று காணியை பார்வையிட்டார்.

அங்கு வந்திருந்த மக்கள் தமது வீடுகளைக் காண்பித்தனர். இது குறித்து மத்திய அரசாங்கத்துடன் பேசுவதாக உறுதியளித்துவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் திரும்பியிருந்தார். சட்டத்தை மீறும் வகையிலோ அல்லது பலவந்தமாகவோ எதிர்க்கட்சித் தலைவர் இங்கு நடந்துகொள்ளவில்லை.

குறித்த பகுதியில் 88 குடும்பங்கள் வசித்து வந்தன. யுத்தம் முடிவடைந்து சுமார் 7 வருடங்கள் முடிவடைந்த பின்னர் 34 குடும்பங்கள் மாத்திரமே மீள்குடியமர்ந்துள்ளன. இன்னும் 54 குடும்பங்கள் மீள்குடியமராதுள்ளன. இராணுவத்தினர் பிடித்துவைத்துள்ள காணி தனியாருடையது.

இதற்கான உறுதிகள் காணி உரிமையாளர்களிடம் உள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இராணுவத்தினர் காணிகளை வைத்திருப்பது தவறில்லை. இருந்தாலும் காணிகளைப் பெறுவதற்கான நடைமுறை பின்பற்றுப்பட்டிருக்க வேண்டும். பரவிபாய்ஞ்சான் பகுதியில் 5 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கே இராணுவத்தினர் அனுமதி கோரியுள்ளனர். எஞ்சிய பகுதியை அவர்கள் கோரவில்லை.

அது மாத்திரமன்றி பிடித்துவைத்துள்ள பகுதியில் உள்ள சகல வீடுகளும் அவர்களால் பயன்படுத்தப்படவில்லை. பெரும்பாலான வீடுகள் பூட்டிவைக்கப்பட்டுள்ளன.

காணி உரிமையாளர்கள் அழைத்தமையாலும், காவலரணில் நின்ற இராணுவ வீரர் எதிர்ப்பு எதனையும் தெரிவிக்காது வழி விட்டதாலும் எதிர்க்கட்சித் தலைவர் அங்கு சென்றிருந்தார். இதனை பலவந்தமாக அவர் நுழைந்துவிட்டதாக அர்த்தம் கற்பிப்பதற்கு ஊடகங்கள் முயற்சிக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எந்தவொரு பகுதிக்கும் பலவந்தமாகச் செல்லக் கூடியவர் அல்ல என்பது சகலருக்கும் தெரிந்த விடயம். இராணுவத்தினர் தம்மவசம் உள்ள தனியார் காணிகளை விடுவித்து வருகின்றனர். இதன் அடிப்படையில் அவர்கள் எஞ்சிய காணிகளையும் விடுவிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அதேநேரம், காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி எழுத்துமூலம் உறுதி மொழி வழங்கியும் காணிகள் விடுவிக்கப்படவில்லை என்ற விசனத்தை நாம் பலதடவைகள் முன்வைத்துள்ளோம்.

இதேவேளை, வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மாத்திரமன்றி, சிங்கள மக்களும், முஸ்லிம்களும் மீள தமது இடங்களில் குடியமரவேண்டும். நாம் ஏற்கனவே இதற்கு அழைப்புவிடுத்துள்ளோம். மீண்டும் இந்த அழைப்பினை அவர்களுக்கு விடுக்கின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to சம்பந்தன் இராணுவ முகாமுக்குள் பலவந்தமாக நுழையவில்லை: சுமந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com