Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளின் பிரதான நிகழ்வு முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் எனப்படும் பகுதியில் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) ஆரம்பித்தது. அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளதாவது, “போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும். சாட்சியங்கள் அற்ற படுகொலைகளாக முள்ளிவாய்க்கால் படுகொலைகள் அமைந்துள்ளன. முள்ளிவாய்க்காலில் 1 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்காக தமிழர்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும்.

போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கு இலங்கையில் சட்டத்தில் இடமில்லை. இதனால் தான் சர்வதேச விசாரணை வேண்டும் எனக் கோருகின்றோம். இலங்கையில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சரியான தீர்வு கிடைக்காது.

உயிரிழந்தவர்களின் மற்றும் காணாமற்போனோரின் குடும்பங்கள் தினமும் எனது அலுவலகம் வந்து என்னைச் சந்திக்கின்றனர். அவர்களின் தேவை அறிந்து, அவர்களுக்கான நிரந்தரத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவேண்டும்.

பாதிக்கப்பட்டு, நடைப்பிணமாக திரியும் மக்களுக்கு இதுவரையில் நாங்கள் என்னத்தை செய்தோம்? என்ற கேள்வியுள்ளது. செய்தோம் என்று சொல்வதற்கு இயலாத நிலையில் நாங்கள் உள்ளோம். கடந்த கால யுத்தத்தில் யார்? யார்? கொல்லப்பட்டார்கள், எவ்வாறு கொல்லப்பட்டார்கள்? யாரால் கொல்லப்பட்டார்கள்? என்ற சாட்சியங்கள் எங்களிடம் இல்லை. ஆகவே அது பற்றி உடனே விசாரணை செய்யவேண்டும்.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது மரபு ரீதியானது. ஒன்று சேர்ந்து சோகத்தை வெளிப்படுத்துவது எங்களின் பாரம்பரிய மரபாகும். இந்த அஞ்சலி நிகழ்வுகளைக் கூட கடந்த காலங்களில் தடுத்திருந்தனர். பல கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. ஆனால் நாங்கள் தேர்ந்தெடுத்த இந்த அரசாங்கம், எங்கள் மனநிலையை புரிந்துகொண்டு தடை விதிக்கவில்லை.

அதேபோல் எங்களுக்கான தீர்வுக்கான வழிவகைகளையும் செய்யும் என நம்புகின்றோம். நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வழிவகைகளை சர்வதேச சமூகம் எடுக்க வேண்டும் என சர்வதேச தலைவர்களிடம் நான் கோரியுள்ளேன்.” என்றுள்ளார்.

0 Responses to சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டும்; முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com