Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசினால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்படுகின்றமை மற்றும் வெள்ளைவான் கடத்தல்கள் மீளவும் ஆரம்பித்துள்ளமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு அம்பாறையில் நேற்று வியாழக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

காணாமற்போனோரின் குடும்பங்களின் ஒன்றியத்தால் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் முன்பாக போராட்டக்காரர்கள் நேற்று காலை ஒன்றுகூடினர். இதில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த காணாமற்போனோரின் உறவுவினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இவர்கள், 'நல்லிணக்கத்தை முறியடிக்கும் வெள்ளை வான் கடத்தலை நிறுத்து!', 'வெள்ளை வான் கலாசாரம் மீண்டும் வேண்டாம்!' உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியிருந்தனர்.

"கடந்த சில வாரங்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகள், முன்னாள் போராளிகள் வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்படுவதும், பின்னர் அது கைதாக மாற்றப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. இந்தத் திடீர் கைதுகளை நிறுத்த வேண்டும். சந்தேக நபர்களை முறையாகக் கைதுசெய்ய வேண்டும்.

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டவேண்டிய பொறுப்பிலுள்ள உங்களின் அதிகாரத்துக்குட்பட்ட அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறு சட்டவிரோதமான ஆட்கடத்தல் இடம்பெற்றுள்ளது. இது குறித்து நாம் கவலையும் ஆத்திரமும் அடைந்துள்ளோம். அத்துடன் இதற்குப் பொறுப்புக் கூறவேண்டும். நல்லாட்சி அரசின் நல்லிணக்க முயற்சியைத் தோற்கடிக்கும் நோக்கில் அல்லது அரசின் அரசியல் தேவைக்காக மக்களை அச்சம் கொள்ளச் செய்யும் நோக்கில் இந்த வெள்ளை வான் கலாசாரம் இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது.

எனவே, இந்தச் சம்பவங்கள் உங்களுக்குத் தெரியாமல் நடந்ததா என்பதை உறுதிப்படுத்துங்கள். இந்த சட்டவிரோத கடத்தல் குறித்து விசாரணை செய்யுங்கள். இதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்துங்கள். இந்த முறைப்பாடு குறித்து மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து எமக்குத் தெளிவுபடுத்துங்கள்" என்ற இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனு அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டீ.ஆர்.ரணவீரவிடம் முதலில் கையளிக்கப்பட்டது.

இதன் பின்னர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திலிருந்து சில மீற்றர் தொலைவிலுள்ள அம்பாறை மாவட்டச் செயலகத்திற்குச் சென்று மேலதிக அரச அதிபரிடமும் மனு கையளிக்கப்பட்டது.

0 Responses to முன்னாள் போராளிகள் கைது, வெள்ளைவான் கடத்தல்களுக்கு எதிராக அம்பாறையில் போராட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com