Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படையினரும் புறக்கணிக்கப் போவதாக எடுத்துள்ள முடிவு, "தவறிழைத்த அதிகாரிகளைப் பாதுகாக்கும் குறுகிய நோக்குடன் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் முடிவு" என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹ்மட் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

திருகோணமலை சம்பூரில் பாடசாலையொன்றில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியொருவரை மேடையில் வைத்து திட்டியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதன்தொடர்ச்சியாக, அவர் கலந்து கொள்ளும் விழாக்களில் எதிர்வரும் நாட்களில் முப்படையினைச் சேர்ந்த யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று கடற்படை அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அதில், “சம்பூர் பாடசாலை நிகழ்வில் கலந்து கொள்ள சென்றிருந்த தனது பெயரையும், மாகாண கல்வி அமைச்சர் பெயரையும், நிகழ்ச்சி தொகுப்பாளர் படிக்கவில்லை என்றும், இருந்தாலும், இந்தத் தவறை கவனித்த மாகாண ஆளுநர், தன்னை மேடைக்கு வருமாறு சைகை செய்ததாகவும், அதையடுத்து, தான் மேடையில் ஏற முயன்றபோது, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்ட கடற்படை அதிகாரி ஒருவர் தன்னை மேடையில் ஏறவிடாமல் தடுத்ததாகவும்” குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அதிகாரியின் நடத்தை மிகவும் மோசமானதாக இருந்ததாக தெரிவித்துள்ள முதலமைச்சர், “இது தன்னை அதிர்ச்சியுற வைத்ததாகவும், இந்தச் செய்கையை தான் கண்டித்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த அதிகாரிகள் முறையான அதிகாரபூர்வ வழிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடாததற்கு, அவர் ஆளுநர் மீதும் பழி சுமத்தினார். தான் அமெரிக்க தூதர் மற்றும் பெருந்திரளாகக் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் முன்னர் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹ்மட் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியும், பிரதமரும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் முன்னரே, முப்படைகள் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கப் போவதாக முடிவெடுத்திருப்பது, தவறிழைத்த தங்கள் அதிகாரிகளை பாதுகாக்கும் குறுகிய நோக்கிலேயே எடுக்கப்பட்ட ஒரு அரசியல் முடிவு என்றும். இந்த சம்பவத்துக்குப் பொறுப்பான அதிகாரிகள் மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தனது கடுமையான, ஆனால் நியாயமான நடவடிக்கைக்காக தான், விழாவில் கூடியிருந்த வெளிநாட்டுத் தூதர், பள்ளி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் சம்பந்தபட்ட கடற்படை அதிகாரியிடம் மன்னிப்பு கோர தயங்க மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர், இந்த விடயத்தில் மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கும் முடிவினை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமே விட்டுவிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to முப்படையினரின் ‘புறக்கணிப்பு’ முடிவுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் கண்டனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com