Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள இராணுவத்தினரை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்துவதாக தமிழக முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு வடக்கு மாகாண முதமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், முதல்வரின் இந்தக் கோரிக்கையை அங்கேயுள்ள இராணுவம் முற்றிலுமாக நிராகரித்து, தமிழர் வாழும் பகுதிகளில் இருந்து இராணுவத்தைத் திரும்பப் பெற முடியாது என்று கூறியுள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் முக்கிய இராணுவ முகாமான சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கு தீப்பிடித்து பெரிய சேதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வடக்கு இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. அதுபற்றி இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, புத்தமதத் தலைமைப் பீடத்துக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அஸ்கிரி மாநாயக்கதேரரிடம் ஆலோசனைகள் பெற்றேன். அப்போது அவர் இராணுவ முகாம்களை அகற்றக்கூடாது என்று கூறினார். ஆகையால் வடக்கின் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளமை தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதைப் போன்ற தீராத வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் ஈழத் தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும் ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கை எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக, அவர்களிடம் வாக்குகளை மட்டும் பெற்றுக் கொண்ட இலங்கை அரசு, இராணுவம் அங்கே தொடர்ந்து இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை புத்த மதத் தலைவரைக் கலந்து கொண்டா ஒரு அமைச்சர் அறிவிப்பது? அது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நியாயமான செயலாகுமா?

இலங்கை அரசு, ஈழத் தமிழர்களிடம் பாகுபாடு காட்டாமல் உள்ளது என்பதை நிரூபிக்க முதற்கட்டமாக தமிழர் பகுதிகளிலே இருந்து உடனடியாக இராணுவத்தை முற்றாக விலக்கிக் கொள்ள வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு நம்பத்தக்க வகையில் நேர்மையோடு எடுக்க வேண்டும். தேர்தலின் போது அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. அதைக்காப்பாற்ற அவர்கள் வாய்மை உணர்வோடு முன்வருவதே ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் செயல். இதுவே உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரின் விருப்பம் வேண்டுகோள். இலங்கை அரசு அதை நிறைவேற்றுமா? இந்திய அரசு அதற்கு முன் நிற்குமா?” என்றுள்ளார்.

0 Responses to வடக்கிலுள்ள இராணுவத்தை விலக்குமாறு கருணாநிதி மைத்திரியிடம் வலியுறுத்தல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com