Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் முன்னேற்றப் பாதையில் இந்தியா தொடர்ந்தும் கை கோர்க்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

“இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலை, கலாசாரம், மொழி ரீதியிலான உறவு நீடித்து வருகின்றது. தற்போது யாழ். துரையப்பா விளையாட்டரங்கு புனரமைக்கப்பட்டுள்ளமையானது, பொருளாதார வளர்ச்சியின் அடையாளமாகும். எனவே, இலங்கையின் முன்னேற்றப் பாதையில் இந்தியா, இலங்கையுடன் கைகோர்த்து நிற்கும்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ்.துரையப்பா விளையாட்டரங்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரினால் நேற்று சனிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் இணைந்து கொண்டார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் மோடியுடன் இருந்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய நரேந்திர மோடி, "கடந்த ஆண்டு நான் யாழ்ப்பாணம் சென்ற போது மக்கள் என்னை அன்புடன் வரவேற்றது இன்று வரை என் மனதில் புத்துணர்வு அளிக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள துரையப்பா விளையாட்டரங்கு வெறும் செங்கல் மற்றும் மணலால் கட்டப்பட்டது அல்ல. இது பொருளாதார வளர்ச்சியின் அடையாளம். இது நமது ஒருங்கிணைப்பிற்கு உத்வேகம் அளிக்கக் கூடியது. இலங்கை மக்களுடன் ஒன்றுகூடி விழா கொண்டாடுவதால் இன்றைய தினம் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த தினம்.

ஐக்கிய நாடுகளின் யோகா தின தீர்மானத்திற்கு முதலில் ஆதரவு அளித்தது இலங்கைதான். இலங்கையின் முன்னேற்றப் பாதையில் இந்தியா, இலங்கையுடன் கைகோர்த்து நிற்கும்.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கையின் முன்னேற்றப் பாதையில் இந்தியா கை கோர்க்கும்: நரேந்திர மோடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com