Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும், அதனால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் இன்னமும் கண்ணிவெடி உள்ளிட்ட கைவிடப்பட்ட வெடிபொருட்களின் அச்சுறுத்தல் தொடர்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, முன்னர் இராணுவ முகாம்களாக இருந்த பல பகுதிகளில் இன்னமும் கண்ணிவெடி அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும், அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்தோடு, தங்கள் காணிகளில் காணப்படும் கண்ணிவெடிகள் உள்ளிட்ட வெடிபொருட்களை அகற்றி விரைவாக தங்களிடம் காணிகளை கையளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோருகிறார்கள்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொம்மாதுறை, மாவடிவேம்பு மற்றும் ஈரளக்குளம் உட்பட சில இடங்களில் இதே நிலை காணப்படுகின்றது.

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான சாலையில் மாவடிவேம்பு இராணுவ முகாம் விலக்கிக் கொள்ளப்பட்டு மூன்று வருடங்களாகின்றன என காணி உரிமையாளரொருவர் கூறியுள்ளார்.

இருபது வருடங்களாக தனது காணியில் நிலைகொண்டிருந்த இராணுவம் விலக்கிக் கொள்ளப்பட்டாலும், கண்ணிவெடிகள் அகற்றப்படும் வரை நுழைய வேண்டாம் என இராணுவம் அறிவித்துள்ளதால், தான் இன்னமும் காணிக்குள் நுழையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு காணிக்குள் பரவிய தீ மற்றும் வெப்பம் காரணமாக வெடிப்பொருட்கள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் மக்கள் பீதியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரு நிலப்பரப்பில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் ஒரளவு பூர்த்தியடைந்திருந்தாலும், இராணுவம் மற்றும் பொலிஸ் நிலை கொண்டிருந்த இடங்களில் காணப்படுவது பற்றி ஏற்கனவே தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ் சார்ளஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மற்றும் இராணுவம் அதிகாரபூர்வமாக அந்த காணியை கையளித்த பின்னர் அதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to கிழக்கில் கண்ணிவெடி உள்ளிட்ட வெடிபொருட்களின் அச்சுறுத்தல் தொடர்கிறது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com