Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தகவலறியும் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போது அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் நிறுவனங்கள் சுயாதீனமாகவும் அச்சமின்றியும் செயற்படக்கூடியனவாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற தகவலறியும் சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையின் நீதித்துறை ஒரு காலத்தில் உயர்ந்த இடத்தில் இருந்தது. அரசியல் தலையீடுகள் காரணமாக நீதித்துறை மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பன பாதிப்புக்களைச் சந்தித்திருந்தன.

இவ்வாறானதொரு நிலையிலேயே நீதி விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்பட வேண்டும் எனக் கோரப்படுவதுடன், சர்வதேச நீதிபதிகளாலேயே நீதியை வழங்க முடியும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். இந்த சட்டத்தில் குறிப்பிட்ட சில விடயங்கள் குறித்த தகவல்கள் பகிரங்கப்படுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நலனுக்கான விடயங்கள் மாத்திரமே அவ்வாறு தெரிவிக்கப்பட முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை தகவலறியும் சட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.

தகவல் அறியும் சட்டமானது ஜனநாயகத்தையும் அடிப்படை உரிமைகளையும் வலுப்படுத்துவதுடன், இது நாட்டின் பிரஜைகளையும் பலப்படுத்தும். மக்களுக்கு இருக்கும் இறையான்மையை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றிய தகவல்கள் மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் இரகசியமான முறையில், மக்களின் கண்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது. மக்கள் சரியான முறையில் தவறில்லாமல் அறிமுகப்படுத்தப்படாலே இச்சட்டத்தின் உரிமை மக்களைச் சென்றடையும்.

நீண்டகாலம் ஆட்சிசெய்த அரசாங்கங்கள் மக்களுக்கு பொறுப்புக் கூறுபவையாக இருக்கவில்லை. தேர்தல் காலத்தில் மட்டும் பொது மக்களுக்கு பொறுப்புக் கூறும் வகையில் அரசாங்கங்கள் இருந்து வருகின்றன. இந்த நிலைமையை முழுமையாக மாற்றுவதற்கு தகவலறியும் சட்டமூலம் வழிவகுக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to தகவலறியும் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போது அரசியல் தலையீடுகள் கூடாது: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com