Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணத்தில் சமஷ்டி முறையிலான தீர்வுத் திட்டத்தினையே வடக்கு மாகாண மக்கள் கோருகின்றனர் என்று வடக்கு மாகாண சபை தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தற்குழுவின் முன் நேற்று வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண சபையின் சார்பில் மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோர் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்டுள்ள சுகயீனம் காரணமாகவே அவரின் சார்பில் கல்வி அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் அக்குழு முன் ஆஜராகி, மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு மாற்றத்திற்கான முன்மொழிவு தொடர்பாக வாய்மொழி மூலம் விளக்கம் அளித்தனர்.

கடந்த கால கசப்பான அரசியல் தொடர்பாக, 13வது திருத்தச் சட்டத்தின் அனுபவங்கள் என்பவற்றின் அடிப்படையிலும் மற்றும் எண்ணிக்கையில் பெரும்பான்மை என்பதற்காக ஓர் இனம் மற்றைய இனத்தை ஆதிக்கம் செலுத்தவோ, கீழ்ப்படிய வைக்கவோ முடியாத வகையில் அரசியலமைப்பு மாற்றம் அமைய வேண்டும் என்பதனைக் கருத்திற் கொண்டே மாகாண சபையின் வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் அக் குழுவுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் இறைமை பகிரப்பட்ட, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடங்கலான சமஷ்டி முறையிலான அரசியலமைப்பே தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் என்றும் எடுத்துக் கூறப்பட்டது. அத்துடன், இணைந்த வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் கரிசனைகளை உள்ளடக்கியதான ஓர் தீர்வினையே தாம் பரிந்துரைப்பதாகவும் எடுத்துக் கூறப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் இரு சிங்கள உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய 36 உறுப்பினர்களாலும் இம் முன்மொழிவு ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது என்றும் அக்குழுவுக்கு சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, வடக்கு மாகாண மக்களின் ஏகோபித்த கருத்தை அரசாங்கம் கருத்திலெடுத்து உறுதியான புதிய அரசியலமைப்பு மாற்றத்தினைக் கொண்டு வரவேண்டும் என்றும் வடக்கு மாகாண சபையின் பிரதிநிதிகளினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 Responses to இணைந்த வடக்குக் கிழக்கில் சமஷ்டித் தீர்வே வடக்கு மக்களின் எதிர்பார்ப்பு: வடக்கு மாகாண சபை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com