Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாணத்திற்கும், வடமத்திய மாகாணத்திற்கும் நீரினைப் பங்கீடு செய்யும் வகையில் விஸ்தரிக்கப்படவுள்ள மகாவலி திட்டத்தின் மொரகஹாகந்த திட்டத்தில் வடக்கு மாகாண சபையின் பங்களிப்பு உள்ளடக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மொரகஹாகந்த திட்டத்தின் முக்கிய விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் கூட்டமொன்று கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சின் செயலாளர், இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ள ‘ஜெய்க்கா’ என்ற ஜப்பானிய நிறுவனத்தின் அதிகாரிகள், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை ஆகியவற்றின் உயரதிகாரிகளும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையின் முக்கிய ஆறாகிய மகாவலி கங்கை 1979ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மகாவலி அதிகார சபையின் ஊடாக வடக்கு நோக்கி திசை திருப்பப்பட்டு, கிழக்கு மாகாணத்தின் பல தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள மக்கள் புதிதாகக் குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள். இதனால் கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்களின் குடிப்பரம்பல் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே, மொரகஹாகந்த திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் அவ்வாறான சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறக்கூடும் என்ற அச்சத்தை வடக்கு மாகாண சபையினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், காணி விடயங்கள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்களுக்குப் பொறுப்பாக இருந்து செயற்பட்டு வருகின்ற வடக்கு மாகாண சபையின் ஆலோசனைகள் உள்ளடக்கப்படுவதுடன், வடக்கு மாகாண சபையின் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகளும் இந்தத் திட்டத்தில் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வடக்கு மாகாண சபையினால் விடுக்கப்பட்டிருக்கின்றது.

மொரகஹாகந்த திட்டத்தில் இருந்து வவுனியா மாவட்டத்திற்குக் கொண்டு வரப்படும் தண்ணீர், கனராயன்குளம் ஆற்றின் ஊடாக பல விவசாய குளங்களுக்கும் ஒரு வலையமைப்பு ரீதியில் பங்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வடமத்திய மற்றம் வடக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பலனடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகண சபையினரின் கருத்துக்களை செவிமடுத்த அதிகாரிகள், இது தொடர்பாக அரச உயர் மட்டத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

0 Responses to மொரகஹாகந்த திட்டத்தில் எமது பங்களிப்பையும் பெற வேண்டும்; வடக்கு மாகாண சபை வலியுறுத்தல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com