Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை - இந்திய மீனவர்களுக்கு இடையே காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் மீண்டும் பேச்சுக்களை தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக இலங்கை மீனவர் பிரதிநிதிகளை இந்தியாவுக்கும், இந்திய மீனவர் பிரதிநிதிகளை இலங்கைக்கும் அழைத்து பேச்சுக்களை இரு கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அதிகாரிகள் ஆகியோருடன் நடத்தப்பட்ட இரு வேறு சந்திப்புக்களையடுத்தே இலங்கை – இந்திய மீனவர்களிடையே மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான தீர்மானம் எட்டப்பட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை, இந்திய மீனவர்களிடையிலான பேச்சுக்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும். சுமார் ஒரு மாத காலத்திற்குள் இந்தியாவிலும் இலங்கையிலும் இரண்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்ததும் மத்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதற்காக இலங்கையிலிருந்து இராஜதந்திர குழுவொன்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை – இந்திய மீனவர்களிடையே மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தல் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீன்பிடி படகுகளை விடுவித்தல் ஆகிய கோரிக்கைகளுடன் கூடியதாக இந்திய மத்திய அரசாங்கம், அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு பேச்சுவார்த்தைக்காக புதுடில்லி வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அழைப்புக் குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை வெளிவிவகார அமைச்சில் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் தீர்க்கமாக ஆராய்ந்ததன் பின்னரே முதலில் இருநாட்டு மீனவர்களிடையிலும் அதனைத் தொடர்ந்து இராஜதந்திர ரீதியாக உயர் மட்டப் பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறான போதும் இலங்கை மீனவர்களின் இலாபம் மற்றும் நலன்புரி குறித்தே எமது கவனம் இருக்கும். அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் இலங்கை மீனவர்களின் நிலைப்பாடு மற்றும் அபிப்பிராயங்களுக்கு நாம் முன்னுரிமை அளிப்போம். அதனை மீறி அமைச்சர்கள் மற்றும் அமைச்சு மட்டத்தில் எவ்வித இரகசிய பேச்சுவார்த்தையோ அல்லது ஒப்பந்தமோ இடம்பெற மாட்டாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கை மீனவர்களை பாதுகாக்கும் அதேநேரம் இந்தியாவுடன் நல்லுறவை பேணுவதற்கு எம்மாலான ஆக்கூடிய முயற்சிகளை முன்னெடுப்போம். இதுவரை காலமும் தமிழ்நாட்டிலிருந்தபடி எம்முடன் மறைமுகமாக மோதி வந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா, முதற் தடவையாக இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகு பாவனையை தடைசெய்யுமாறு பிரதமர் மோடிக்கு முன்வைத்திருக்கும் யோசனையை அறிந்து நாம் மகிழ்ச்சி அடைந்தோம். அவரது இந்த யோசனையை உடன் அமுல்படுத்துமாறு நாமும் இந்தியப் பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளோம் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர  தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கை - இந்திய மீனவர்கள் இடையே மீண்டும் பேச்சக்களை ஆரம்பிக்க முடிவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com